பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் சாரதிக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தால் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த நேரம் காத்தான்குடி – கல்முனை பிரதான வீதியில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தியவாறு மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்வதற்காக பதிவுப் புத்தகத்தில் எழுதிக்கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரை தள்ளிவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரது கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்த முனைந்துள்ளார்.
இதனையடுத்து வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

