இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு உலகளாவிய நிதியின் 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளர் அறிக்கையில் ‘ஏ’ எனும் முதன்மைத்தரம் வழங்கப்பட்டுள்ளது.
இது பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த நாட்டை மீட்டெடுத்து, முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்வதற்கு ஆளுநர் நந்தலால் வீரசிங்க வழங்கிய தலைமைத்துவம் மற்றும் அவரது நுட்பமிகு திறன்களுக்கான பெருமைமிகு அங்கீகாரமாக அமைந்திருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல், பொருளாதார வளர்ச்சி, ரூபாவின் பெறுமதியைத் தளம்பலற்ற நிலையில் பேணல் மற்றும் வட்டிவீதக் கட்டுப்பாடு ஆகிய முக்கிய பிரிவுகளில் ஆளுநரால் எட்டப்பட்ட அடைவுகளையும் இது காண்பிப்பதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
உலகநாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களின் செயற்திறன்மிக்க நடவடிக்கைகளையும், பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் அவர்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டையும் கௌரவிக்கும் நோக்கில் உலகளாவிய நிதியினால் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் இத்தகைய தரப்படுத்தல் வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

