உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை ஜனாதிபதி மீறியுள்ளார் என்று உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது.
வி.எப்.எஸ். விவகாரம் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள தீர்ப்பினை அமைச்சரும்,அரச அதிகாரிகளும் வேண்டுமென்றே மீறுகிறார்கள். நிச்சயம் சட்டத்தின் முன் பொறுப்புக் கூற நேரிடும்.அதற்கான சூழலை நாங்கள் ஏற்படுத்துவோம் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் கொழும்பில் வியாழக்கிழமை (22) ஒன்றிணைந்து ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர்.இதன்போது கருத்து தெரிவிக்கையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ, சுமந்திரன் குறிப்பிட்டதாவது,
நடைமுறையில் இருந்த விசா விநியோக முறைமையை மாற்றி புதிய முறைமையை அறிமுகப்படுத்துவதாக அரசாங்கம் எடுத்த தீர்மானத்தால் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.அரச நிதி தொடர்பான குழு ஊடாகவே இவ்விடயம் புலப்பட்டது.இதனை தொடர்ந்து அடிப்படை உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்திருந்தோம்.
இந்த மனுக்களுக்கு அமைய புதிய விசா முறைமைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. அமுல்படுத்தப்பட்ட புதிய முறைமையை உடனடியாக இடைநிறுத்தி, பழைய முறைமையை மீண்டும் செயற்படுத்துமாறு உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவுறுத்தியிருந்தது.
உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவுக்கமைய புதிய முறைமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பழைய முறைமை அமுல்படுத்தப்படவுமில்லை. நீதிமன்றத்தின் உத்தரவு வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளது. அதற்கு அடிப்படையற்ற விடயங்களும் குறிப்பிடப்படுகின்றன.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதற்கமைய செயற்பட வேண்டும்.அதன் பின்னரே ஏனைய விடயங்கள் குறித்து ஆராய வேண்டும்.வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டு புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் பழைய முறைமைக்கு செல்ல முடியவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. இந்த வர்த்தமானி பற்றி நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.
இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் அரச தரப்பினரால் வர்த்தமானி பற்றி மன்றில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.அவற்றையும் கருத்திற் கொண்டு தான் உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது.
இந்த வர்த்தமானி பிரசுரம் ஏதாவதொரு செயற்பாட்டுக்கு தடையாகவிருப்பதாக அமைச்சர் கருதுவராயின் உடனடியாக வர்த்தமானியை திருத்தம் செய்யலாம் அல்லது இரத்து செய்யலாம்.அதனை தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கலாம்.
உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவை கருத்திற் கொண்டு பாராளுமன்றம் நிச்சயமாக அந்த மாற்றத்துக்கு அனுமதி வழங்கியிருக்கும்.
இதனை செயற்படுத்துவதை விடுத்து இடைக்கால தடை உத்தரவுக்கு அமைய செயற்பட முடியாது என்று குறிப்பிடுவது பாரதூரமானதொரு குற்றம். இதற்கு தண்டனை வழங்குவதற்கு காலம் செல்லும், அது நடக்கும்.நாங்கள் அதனை நிறைவேற்றுவோம். மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமை குறித்து உயர்நீதிமன்றம் சிறந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. தேர்தல் பிற்போட்டமையால் மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளார் என்று உயர்நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை வேண்டுமென்றே மீறும் அமைச்சரும், அதிகாரிகளும் நீதிமன்றத்துக்கு பொறுப்புக் கூற வேண்டும். பொறுப்புக் கூறும் சூழலை நாங்கள் ஏற்படுத்துவோம் என்றார்.

