பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடி நினைவேந்தல் – 2024

58 0
வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தலும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தலும் பாரிஸ் புறநகர் பகுதியான திரான்சி பகுதியில் நேற்று (17.08.2024) சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை திரான்சி தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.பாபு அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை 13.01.1994 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படைமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி சுதாஜினி அவர்களின் தாயார் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. கவிதை, நினைவுரைகள் இடம்பெற்றிருந்தன. நினைவுரைகளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்களும் செயற்பாட்டாளர் திரு.செங்கதிர் அவர்களும் தமிழ்ப் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த திருமதி வலன்ரீனா அவர்களும் ஆற்றியிருந்தனர். நினைவுக் கவிதையினை திருமதி யசோ அவர்கள் வழங்கியிருந்தார்.
நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.