“ஆளுநருடைய கருத்தியல் சார்ந்திருக்கக் கூடிய விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் திமுகவுக்கு இருக்கிறது. ஆனால், ஆளுநர் என்கிற அந்தப் பதவியின் மீதும், அந்தப் பொறுப்பின் மீதும் முதல்வர் பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார். எனவே, அந்த கோட்பாடுகளின் அடிப்படையில், ஆளுநருடைய அழைப்பினை ஏற்று தேநீர் விருந்தில் நாங்கள் கலந்து கொள்கிறோம்,” என்று தமிழக நிதி மற்றும் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ஆளுநர் தேநீர் விருந்தை பொறுத்த அளவில், திராவிடர் கழகம் புறக்கணிப்பதாக தெரிவித்தது. அரசினுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அரசின் சார்பில் ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். முதல்வர், அமைச்சர்களுக்கு எல்லாம் ஆளுநர் அழைப்பு விடுத்திருக்கிறார். அரசின் சார்பில், ஆளுநருடைய அழைப்பினை ஏற்று அந்த விருந்தில் நாங்கள் கலந்து கொள்வதாக முடிவு செய்திருக்கிறோம். அந்த விருந்தில் பங்கேற்கிறோம்,” என்றார்.

