ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்திலான ‘பொதுஜன ஐக்கிய மக்கள் முன்னணிக்கும்’ பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் நிமல் லான்சா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் 14ஆம் திகதி புதன்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த கூட்டணியானது ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் ‘பொதுஜன ஐக்கிய முன்னணி’ கதிரை சின்னத்தில் போட்டியிடவுள்ளதுடன், வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக ‘பொதுஜன ஐக்கிய முன்னணி’யின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண உறுதிப்படுத்தினார்.
மேலும், இந்த கூட்டணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்துகொள்ளவுள்ளன. இதனை மையப்படுத்தி கடந்த வெள்ளிக்கிழமை இரவு ரமாடா ஹோட்டலில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் நசீர் ஹமட், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம், அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மையில் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா , நிமல் லான்சா, துமிந்த திசாநாயக்க மற்றும் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த உட்பட புதிய அரசியல் கூட்டணியின் செயற்பாட்டாளர்கள் பலரும் புரிந்துணர்வு ஒப்பந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

