மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் மிச்நகர் – ஹிஸ்புல்லா நகர் பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (06) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
ஹிஸ்புல்லா நகர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய திருமணமாகாத நபர், அவரது வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது வீட்டுடன் சேர்த்து அமைக்கப்பட்டிருக்கும் பலசரக்கு நிலையம் ஒன்றை நடத்திவரும் வர்த்தகர் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
கொலை நடந்த வீட்டில் இருந்த சிசிரிவி கமராவின் பிரதான சேமிப்பு தட்டு சந்தேக நபரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த தடயவியல் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி சடலத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
சடலம் பிரதே பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்,இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

