பங்களாதேஷ் நாட்டின் நிலைமையை சிறந்த படிப்பினையாக கொள்ள வேண்டும் – பிரேம்நாத்.சி தொலவத்த

101 0

மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாத தரப்பினர் ஜனநாயகம் என்று குறிப்பிட்டுக் கொண்டு  பாசிசவாத கொள்கையுடன் செயற்படுகிறார்கள். பங்களாதேஷ் நாட்டின் தற்போதைய நிலைமையை அனைவரும் ஒரு படிப்பினையாக கொள்ள வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் .சி தொலவத்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற மாத்தறை நில்வலா கங்கை அண்மித்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள உவர்நீர் தடுப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை’ தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஆசிய வலய நாடுகளில் அரசியல் நிலை அவதான நிலையில் காணப்படுகிறது.2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் நிலை தற்போது பங்களாதேஷ் நாட்டில் காணப்படுகிறது.போராட்டங்களுக்கு மத்தியில் பங்களாதேஸ் நாட்டின் பிரதமர்  பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

எமது அரசாங்கத்தின் ஒருசில தவறான தீர்மானங்களினால் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போராட்டங்கள் தோற்றம் பெற்றன. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வழியில் போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.

மக்கள் போராட்டத்தை ஒரு அரசியல் கட்சி தமது அரசியலுக்காக பயன்படுத்தி பாசிஸ கொள்கையுடன் மக்களை தூண்டி விட்டது.அரகலயவின் போது நாட்டில் சட்டவாட்சி மலினப்படுத்தப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் தான்  ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.போராட்டகாரர்கள் பாராளுமன்றத்தையும் கைப்பற்றியிருந்தால் பங்களாதேஸ் நாட்டின் நிலை தான் இங்கும் தோற்றம் பெற்றிருக்கும்.

நாட்டின் சட்டவாட்சியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 ஆம் ஆண்டு கடுமையான தீர்மானங்களை எடுத்தார்.

அவ்வாறு செயற்பட்டதால் தான் நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.தற்போதைய முன்னேற்றத்தை சீர்குலைப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி தொழிற்சங்கள போராட்டங்களை தூண்டி விடுகிறது.

மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாதவர்கள் ஜனநாயகம் என்று குறிப்பிட்டுக் கொண்டு பாசிஸவாத கொள்கையுடன் செயற்படுகிறார்கள்.பங்களாதேஸ் நாட்டின் நிலைமையை அனைவரும் ஒரு படிப்பினையாக கொள்ள வேண்டும் என்றார்.