மகளை மோதி விட்டு தப்பிச்சென்ற லொறியை துரத்திச் சென்ற தந்தை உயிரிழப்பு ; லொறியின் சாரதி கைது!

84 0

பலாங்கொடை நகரில் மோட்டார் சைக்கிளை மோதி 7 வயது சிறுமியை காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்ற லொறியை  துரத்தி  சென்ற தந்தை  உயிரிழந்த  சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் நேற்று வெள்ளிக்கிழமை   (02)  கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். 

பலாங்கொடை பகுதியில்,  இந்த லொறி சாரதி  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதி   ஏழு வயது சிறுமி ஒருவரை காயப்படுத்திவிட்டு லொறியை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

பின்னர்,  சிறுமியின்   32 வயதுடைய தந்தை மோட்டார் சைக்கிளில் லொறியை  துரத்திச் சென்று லொறியின் கதவில் ஏறி சாரதியை கீழே இறக்க முற்பட்ட வேளை,  தந்தை விபத்திற்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அத்துடன்  சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது ,  அந்த பகுதியில் அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் லொறியின் சாரதி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

இதேவேளை,  லொறியின் சாரதி இன்று  சனிக்கிழமை  (03) பலாங்கொடை பதில் நீதவான் நீதிமன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.