கண்டி லூயிஸ் பீரிஸ் மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஏழு வயது சிறுவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கண்டி லூயிஸ் பீரிஸ் மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கிய 7 வயதான சகோதரனை காப்பாற்ற 10 வயதான சகோதரன் நீச்சல் தடாகத்தில் குதித்துள்ளார்.
நீரில் மூழ்கிய சகோதரனைக்காப்பாற்றுவதற்காக நீச்சல் தடாகத்தில் குதித்த 10 வயதான சகோதரன் காப்பாற்றப்பட்டு கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டி- குருந்துகொல்ல – வெரெல்லாகமவில் வசிக்கும் இந்த இரண்டு சகோதரர்களும் தங்களது பெற்றோருடன் 27 ஆம் திகதி சனிக்கிழமை இந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது நீச்சல் தடாகத்தில் இரண்டு சகோதரர்களும் தனியாக இருந்த போது 7 வயதுடைய இளைய சகோதரன் நீச்சல் தடாகத்தில் விழுந்துள்ளார் இந்நிலையில், அவரைக் காப்பாற்ற 10 வயதான மூத்த சகோதரன் நீச்சல் தடாகத்தில் குதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இரு சகோதரர்களையும் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது 7 வயதுடைய இளைய சகோதரன் உயிரிழந்துள்ளதுடன் 10 வயதான மூத்த சகோதரன் கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

