திமுக அரசை எதிர்த்து போராட்டம்: பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு

112 0

பாமக தலைவர் அன்புமணி தனது எக்ஸ் வலைதளப்பதிவில் நேற்று பதிவிட்டிருப்பதாவது: மக்களையும், தொழில் துறையினரையும் கடுமையாக பாதிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்தியதற்காக என் மீதும், 100-க்கும் மேற்பட்ட பாமகவினர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

போராட்டத்தின்போது, மின்சார வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்தும், செயல்படுத்தப்படாத மின்திட்டங்கள் குறித்தும் ஆதாரங்களுடன் விளக்கினேன். அவை மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதை தாங்கிக் கொள்ள முடியாமல்தான் பாமகவினர் மீது பொய் வழக்கு பதிவு செய்யுமாறு திமுக அரசு தூண்டியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் 5,000 படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றைத் தடுக்க காவல் துறையால் முடியவில்லை. கள்ளச்சாராய சாவுகளையோ, கஞ்சா விற்பனையையோ கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், மின் கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தினால், வழக்கு பதிவு செய்கிறது.

மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்தும் பாமக சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும். சென்னையில் போராட்டம் நடத்தியதற்காக காவல் துறை தொடர்ந்துள்ள பொய் வழக்கை, சட்டப்படி எதிர்கொள்வோம். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.