அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான, இரகசிய ஆவணங்கள் தொடர்பான வழக்கை அந்நாட்டு நீதிபதி ஒருவர் நேற்று தள்ளுபடி செய்தார்.
ஜனாதிபதி பதவிக்காலத்தின் பின்னர், அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்கள் பலவற்றை முறையற்ற வகையில் கையாண்டார் என்பது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் மீது 40 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இவ்வழக்கில் தான் நிரபராதி என ட்ரம்ப் கூறியிருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டிருந்த விசேட விசாரணை அதிகாரி ஜெக் ஸ்மித்தின் நியமனமும், இவ்விசாரணைக்கான நிதியளிப்பும் சட்டவிரோதமானது என டொனால்ட் ட்ரம்ப் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை ஆராய்ந்த, புளோரிடா மாநிலத்திலுள்ள மாவட்ட நீதிமன்றமொன்றின் நீதிபதி அய்லீன் கெனோன் இவ்வழக்கை நேற்று தள்ளுபடி செய்தார்.
இத்தீர்ப்பு டொனால்ட் ட்ரம்புக்கு ஒரு பாரிய வெற்றியாக கருதப்படுகிறது. படுகொலை முயற்சியில் டொனால்ட் ட்ரம்ப் உயிர்தப்பிய சம்பவத்துக்கு 2 நாட்களின் பின் இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.

