ஜனாதிபதித் தேர்தலுக்கு தடையேதும் கிடையாது : ஜூலை இறுதியில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்

113 0

அரசியலமைப்பின் ஏற்பாடுகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் சட்டம் என்பவற்றுக்கு அமைய ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம். ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இதற்கமைய ஜனாதிபதி தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை இந்த மாதம் இறுதி பகுதியில் அறிவிப்போம். இம்முறை 1 கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவதற்கு தடையேதும் கிடையாது.கடந்த காலங்களை காட்டிலும் இம்முறை ஜனாதிபதி தேர்தல் குறித்து மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்.ஆகவே சுதந்திரமாகவும்,நீதியாகவும் தேர்தலை நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் சார்பில் வலியுறுத்தினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தல் குறித்து எழுப்பப்படும் மாறுப்பட்ட கருத்துக்கள் குறித்து மக்களை தெளிவுப்படுத்தும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு.அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்கெடுப்பு திகதி,வேட்பு மனுக்களை கையேற்கும் திகதி,தேர்தல் அறிவித்தலை பிரகடனப்படுத்தும் திகதி ஆகியவற்றைத் தீர்மானிக்கும் போது பல விடயங்களைக் கருத்திற் கொள்ள வேண்டும். வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்கு போதுமான காலவகாசம் வழங்குதல், வாக்கெடுப்புடன் தொடர்புடைய சட்டரீதியிலான கடமைகளுக்கு போதுமான காலவகாசம் வழங்குவதைப் போன்று அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதற்குப் பொருத்தமான  சூழலைக் கொண்ட ஒரு தினத்தை தீர்மானித்தல் குறித்து கவனத்திற் கொள்ளப்படும். ஏதேனும் காரணத்தினால் வாக்கெடுப்பு நிலையமொன்றில் வாக்கெடுப்பை இரத்துச் செய்ய நேரிட்டால் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் வாக்கெடுப்பை நடத்துவதற்கு குறைந்தபட்சம் 14 நாட்கள் தேவைப்படும்.

வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் காலப்பகுதி காலை 09 மணிமுதல் 11 மணிவரை என்று இரண்டு மணித்தியாலங்கள் வரையறுக்கப்பட்டிருப்பதால் பெயர் குறித்த வேட்பு மனுக்களை கையேற்கும் போது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் மத சம்பிரதாயங்களையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் திகதி அறிவிப்பு

பொது காரணிகள் காரணிகள் ,அரசியலமைப்பின் ஏற்பாடுகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் சட்டம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு வாக்கெடுப்பு திகதியை இந்த மாதத்தின் இறுதி பகுதியில் அறிவிக்க முடியும்.ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஜூலை 17 ஆம் திகதி (இன்று) கிடைக்கப் பெறுகின்ற நிலையில் வாக்கெடுப்பு திகதியை ஆணைக்குழு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

அரசியலமைப்பின் ஏற்பாடுகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை ஆராயும் போது நடைமுறை தன்மையை விளங்கிக் கொள்ள முடியும். இந்த மாதம் இறுதி பகுதியில் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டவுடன் அன்றிலிருந்து 16 முதல் 21 நாட்;களுக்குள் வேட்பு மனுத்தாக்கலை பொறுப்பேற்கும் திகதியை அறிவிக்க வேண்டும்.வேட்பு மனுத்தாக்கல்களை பொறுப்பேற்ற திகதியிலிருந்து 4 முதல் 6 வாரங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு திகதியை அறிவிக்க வேண்டும்.

வாக்காளர் எண்ணிக்கை

ஜனாதிபதி தேர்தலுக்கு 2024 ஆம் ஆண்டுக்காக அத்தாட்சிப்படுத்தப்பட்ட புதிய தேருநர் ( வாக்காளர் இடாப்பு)  பயன்படுத்தப்படும்.2024 ஆம் ஆண்டு பிரதான இடாப்பு தவிர 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட குறைநிரப்பு இடாப்பும்  அத்தாட்சிப்படுத்தப்பட்டு பிரதான இடாப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒருகோடியே எழுபத்தொரு இலட்சத்து நாற்பதாயிரம் (17,140 ,000 ) வாக்காளர்கள் தகுதிப் பெற்றுள்ளனர்.தேர்தல் பணிகளுக்காக ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.

தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டம்

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான அறிவிக்கப்பட்ட காலப்பகுதியில் தேர்தல் செலவுகள் சட்டம் இயற்றப்பட்டது.இந்த சட்டம் இலங்கை அரசியலுக்கு புதிய அத்தியாயமாகும்.உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமையால் இந்த சட்டத்தை செயற்படுத்த முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் இந்த சட்டத்தை  அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கு தேவையான பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. கடந்த தேர்தல்களின் போது மேற்கொள்ளப்பட்ட விதத்தில் தேர்தல் பிணக்குகளைத் தீர்ப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.