காவிரி பிரச்சினையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும், சட்டபேரவையில் இடம் பெறாத கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட மறுத்துவரும் நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசையும்,காவிரி மேலாண் ஆணையத்தையும் வலியுறுத்தும் வகையில் ஜூலை 16-ம் தேதி(இன்று) சட்டப்பேரவை கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்துக்கு சட்டப்பேரவையில் இடம் பெறாத கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரை அழைக்காதது ஏன்? தமிழக அரசின் இந்த முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக விவசாயிகள், தொடுத்த வழக்கில்தான் காவிரி நடுவர் மன்றம், அதன்பின், காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவையில் இடம் பெற்றுள்ள கட்சிகள்மட்டுமில்லாமல், இடம் பெறாதகட்சிகளும், விவசாய அமைப்புகளும் காவிரி பிரச்சினையில் தொடர்ந்து போராடி வருகின்றன. ஆனால், அனைத்து கட்சி கூட்டத்துக்கு அவர்களை அழைக்காதது காவிரி நலனுக்கு எதிரானதாக அமையும். எனவே, இந்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, அனைவருக்கும் அழைப்புவிடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

