விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தினார் நெப்போலியன்!

25 0

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு தனது குடும்பத்துடன் சென்ற நடிகர் நெப்போலியன், அவருடைய உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின்னர் அவருடைய உடல், உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இன்று வரை ஏராளமானோர் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விஜயகாந்த் இறந்தபோது வர முடியாத சூழ்நிலையில் அமெரிக்காவில் இருந்த நடிகரும், விஜயகாந்தின் நண்பருமான நெப்போலியன் தற்போது இந்தியா வந்துள்ளார்.

இதையடுத்து, சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு நடிகர் நெப்போலியன் தனது மனைவியுடன் இன்று (ஜூலை 9) சென்றார். அங்கு, விஜயகாந்த் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன் சண்முக பாண்டியனுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை நெப்போலியனிடம் காண்பித்து பிரேமலதா விவரித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.