தொழிற்கட்சியின் அமோக வெற்றி தமிழர் நலன் காக்க உதவும் ; இனிவரும் காலங்களில் பொறுப்புக்கூறல் சார்ந்த அழுத்தம் வலுப்பெறும்

123 0

பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிற்கட்சியின் அமோக வெற்றி ஈழத்தமிழர் நலனில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், எதிர்வருங்காலங்களில் இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் தொடர்பான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன முன்னேற்றகரமான மட்டத்தை நோக்கி நகரும் எனவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச மட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பிரிட்டன் பொதுத்தேர்தலில் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிற்கட்சி அமோக வெற்றியீட்டியிருக்கும் நிலையில், இவ்வெற்றி இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதிலும் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த பல வருடங்களாக தொழிற்கட்சி உறுப்பினர்கள் பலர் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவேண்டும் எனவும், நீதி நிலைநாட்டப்படவேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுடன் அதனை முன்னிறுத்தி சர்வதேச தளங்களில் அழுத்தங்களையும் பிரயோகித்துவருகின்றனர். அதுமாத்திரமன்றி இம்முறை பொதுத்தேர்தலில் பிரிட்டன்வாழ் ஈழத்தமிழ் பெண்ணான உமா குமாரனும் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருக்கின்றார்.

இவ்வாறானதொரு பின்னணியில் 14 வருடங்களுக்குப் பின்னர் பிரிட்டனில் நிகழ்ந்திருக்கும் இந்த ஆட்சிமாற்றம் ஈழத்தமிழர் நலனில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடுமென எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அதன்படி இதுபற்றிக் கருத்து வெளியிட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், பிரிட்டனில் தொழிற்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியமையை தமிழர்கள் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்தார். அத்தோடு கடந்த காலங்களில் தான் தொழிற்கட்சி உறுப்பினர்களைச் சந்தித்துப்பேசிய வேளைகளில் அவர்கள் தமிழ்மக்களின் பிரச்சினைகள் குறித்து நன்கறிந்திருந்ததாகவும், பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

‘ஆங்கிலேயர்கள் இலங்கையைவிட்டு வெளியேறியபோது, வடக்கில் பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழர்களைக் கருத்திற்கொண்டு நியாயமானதொரு அதிகாரப்பகிர்வை வழங்காததன் காரணமாக, இவ்விடயத்தில் அவர்கள் பொறுப்புக்கூறவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். எனவே எதிர்வருங்காலங்களில் தொழிற்கட்சி தலைமையிலான அரசாங்கம் தமிழ்மக்களின் நலனை முன்னிறுத்தி குரலெழுப்பும் என நம்புகின்றேன். அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரிலும், அதன் பின்னரும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதை இலக்காகக்கொண்ட செயற்பாடுகளை அவர்கள் முனைப்புடன் முன்னெடுக்கவேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை பிரிட்டனின் புதிய பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் கெய்ர் ஸ்டார்மருக்கு தமிழ் மக்கள் சார்பில் வாழ்த்துத்தெரிவித்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், தொழிற்கட்சி உறுப்பினர்கள் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் சார்ந்து அக்கறையுடன் கருத்துக்களை வெளியிட்டுவந்திருப்பதன் காரணமாக, இனப்படுகொலை தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் நீதி என்பன எதிர்வருங்காலங்களில் முன்னேற்றகரமான நிலையை நோக்கி நகரும் என எதிர்பார்ப்பு வெளியிட்டார்.

அத்தோடு கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் பிரித்தானிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தபோது அரசியல் தீர்வு குறித்த அவரது கேள்விக்கு, ‘சமஷ்டி அடிப்படையிலான நியாயமான தீர்வு அவசியம்’ எனத் தான் பதிலளித்ததாகவும், அதனை அவர் கரிசனையுடன் கேட்டுக்கொண்டதாகவும் சிறிதரன் தெரிவித்தார். ஆகவே எதிர்வருங்காலங்களில் சர்வதேச விசாரணையை ஊக்குவிக்கும் வகையிலும், இலங்கை தொடர்பான தீர்மானத்தைப் பாதுகாப்புச்சபைக்குக் கொண்டுசெல்லும் விதமாகவும் பிரிட்டன் நகர்வுகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் தொழிற்கட்சியைப் போன்றே கொன்சவேட்டிவ் கட்சியும் கடந்த காலங்களில் தமிழர் விவகாரத்தில் முனைப்புடன் செயலாற்றி வந்திருப்பதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கொண்டுவருவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டிய இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், எனவே தொழிற்கட்சியின் வெற்றியினால் மாற்றமொன்று நிகழுமெனில், அது தமிழர்களுக்கு மேலும் சிறந்த மாற்றமாகவே அமையும் என நம்பிக்கை வெளியிட்டார்.