எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழ் இன அழிப்பிற்கு நீதி கிடைப்பதற்காக குரல் கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்

51 0

எந்தக்கட்சியாகயிருந்தாலும் தமிழ் இன அழிப்பிற்காக குரல்கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரிட்டனில் இன்று தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் வாக்களிப்பு குறித்து தமிழ் மக்களிற்கு தெளிவுபடுத்தும் அறிக்கையொன்றை விடுத்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் .தெரிவித்துள்ளதாவது

தமிழ் மக்களாகிய  நாங்கள் வாழும் நாடுகளில் எம்மை தகவமைத்து கொண்டு கல்வி அறிவியல் தொழில்நுட்பம் பொருளாதாரம் அரசியல் இராஜதந்திரம் போன்ற பல்வேறு துறைகளில் குறிப்பிடத் தக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றோம்.

உலகிலே பல நாடுகளில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களாகிய நாம் வலுவான மூலோபாயத்தின் அடிப்படையில் எம்முடைய வாக்குரிமையை சரியாகப் பயன்படுத்தி எம் மக்களின் அபிலாசைகளை ஆதரிக்கும்  வேட்பாளர்களுக்கு வாக்குகளைச் செலுத்தி எதிர்வரும் காலங்களில் இந்த நாட்டின் பாராளுமன்றின் உள்ளும் புறமும் எம் மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு முன்னிருந்ததை விட அதிக சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும். லண்டன் மாநகரில் குறிப்பாக வேறு சில இடங்களில் உள்ள எம் வாக்குப் பலத்தையும்இ அரசியல் ஈடுபாடுள்ள செயல்பாட்டாளர்களையும் ஒருங்கிணைத்து இங்குள்ள அரசியலில் தமிழ் மக்களின் செயல்திறன் தவிர்க்கப்பட முடியாத அங்கமாக நிரூபிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

பிரித்தானியாவில் அரசியல் பீடங்களில் தமிழ் மக்களின் நீதியான போராட்டத்திற்கு பரந்துபட்ட ஆதரவுத் தளத்தினை உருவாக்க வேண்டும் என்ற தேவை கருதி பிரித்தானிய தமிழர் பேரவை  2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உருவாக்கப்பட்டது. அது தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ) 2007ஆம் ஆண்டு உருவாக்கியது. அத்துடன் இந்த நாட்டிலுள்ள சனநாயக வெளியில் பயணிக்கும் தமிழ் மக்களை அவரவர் விரும்பிய கொள்கைகளை கொண்ட கட்சிகளில் இணையவும் அத்துடன் அவ் அவ் கட்சிகளை ஆதரிக்கும் தமிழர் அமைப்புகளை உருவாக்கிடவும் முனைப்பாக முன்னின்று செயல்பட்டது. அதனடிப்படையில் உருவாக்கப்பட்டவையே  Tamils for Labour, British Tamil Conservatives, Tamil Friends of Liberal Democratsஎன்பன.

அரசியல் என்பது நம் வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு அம்சம். குறிப்பாக நீதிக்காக இடையறாது போராடும் தமிழ் மக்கள் தாம் வாழும் நாட்டின் அரசியல் முடிவெடுக்கும் மையங்களை தவிர்த்து புறக்கணிப்பது எம் எதிரிகளின் நோக்கங்களுக்கு சாதகமாகவே அமையும். சக்தி வாய்ந்த மையங்களின் கொள்கை வகுப்பில் எம் தேசத்திற்கு சாதகமான மாற்றங்களை கொண்டு வர தமிழ் மக்கள் உழைக்க வேண்டும்.

எந்த வேட்பாளராக இருந்தாலும் உங்களுடைய வாக்குரிமையை விட்டுக் கொடுக்காமல் வாக்களித்தால் எமக்கான நீதி கோரலுக்கான அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு எம்மால் சரியான நேர்த்தியான ஓர் அரசியல் கட்டமைப்பை பலப்படுத்தி எம் தாயகத்தில் எம்மை நாமே ஆட்சி செய்யக் கூடிய சூழலை உருவாக்க முடியுமென்பதைக் கருத்திற் கொண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் உங்களுடைய வாக்குகளைச் செலுத்தி தமிழ் மக்களின் பலத்தை வெளியுலகிற்கு காட்ட முன்வாருங்கள்.

எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழ் இன அழிப்பிற்கு நீதி  கிடைப்பதற்காக குரல் கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள். உங்கள் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்  எவரும் இதுவரை இன அழிப்பிற்கு எதிராக தங்கள் குரலை கொடுக்காவிட்டால்  நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள். ஆனால் அவருக்கு வாக்களிப்பதற்கு முதல் அவர்களின் தனிப்பட்ட மின் அஞ்சல் முகவரிக்கு நீங்கள் ஏன் அவருக்கு வாக்களிக்கிறீர்கள் என்று ஒரு மின்னஞ்சலை அனுப்பி விட்டு வாக்களியுங்கள்.

இதன் மூலம் இதுவரை தமிழின அழிப்பு சம்பந்தமாக  போதிய தகவல்கள் தெரியாத வேட்பாளர்களுக்கு எங்களுக்கு நடைபெற்ற இன அழிப்பு சம்பந்தமான தகவல்களை தெரியப்படுத்த முடியும். ஆகவே பிரித்தானிய மண்ணில் இருக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ள ஒவ்வொரு தமிழரும் கட்டாயம் வாக்களியுங்கள். ஆனால் வாக்களிக்க முன் மேற்குறிப்பிட்ட விடயத்தை கவனத்தில் கொள்ளுங்கள்.