தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை மிகவும் அவசியமானது !

66 0

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்துவதற்கான பொறிமுறைகளும் மதிப்பிடும் வழிவகைகளும் காணப்படுகின்றன என பிரிட்டனின் தொழில்கட்சி கருதுகின்றது என அந்த கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் பிரிட்டிஸ் தமிழரான டெவினா போல் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களிற்கு சுயநிர்ணய உரிமை எவ்வளவு அவசியம் என்பதை நான் உணர்ந்துகொண்டிருக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

தமிழ் கார்டியனிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொழில் கட்சி  எப்போதும் சமாதானம் மற்றும் நீதி ஆகிய விடயங்களில் இலங்கை தமிழர்களுடன் தோளோடு தோள் நின்றுள்ளது.

தொழில்கட்சியின் தலைவர் கெயர் ஸ்டாமெர், சபான் மக்டொனாக் ஸ்டீபன் டிம்ஸ்,எங்கள் எதிர்கால வெளிவிவகார அமைச்சர் டேவிட் லம்மி போன்றவர்களும் ஏனைய பலரும் இலங்கையில் யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் தமிழர்கள் தொடர்ந்தும் அனுபவிக்கும் துயரங்களிற்கு போதிய நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமை குறித்து குரல்கொடுத்து வந்துள்ளனர்.

கடந்த மாதம் தமிழர் இனப்படுகொலை வாரத்தின் போது தொழில்கட்சி ஆட்சி அமைத்தால் பொறுப்புக்கூறல் என்பது அதன் வெளிவிவகார கொள்கைகளில் முக்கியமானதாக காணப்படும் என கெய்ர் ஸ்டார்மெர் டேவிட் லம்மி சார்பில் வெஸ்ஸ்ரீட்டிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இந்த விடயம் நிகழ்ச்சி நிரலில் இருந்து  விலக்கப்படக்கூடாது என்பது குறித்து தொழில் கட்சியிடம் கடும் உறுதிப்பாடு காணப்படுகின்றது.குற்றங்களில் ஈடுபட்ட தனிநபர்கள் சர்வதேச நீதிமன்றம் மூலம் பொறுப்புக்கூறச்செய்யபடவேண்டும் அதற்கான பாரப்படுத்துதல் இடம்பெறும் எனவும் வெஸ்ஸ்ரீட்டிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்துவதற்கான பொறிமுறைகளும் மதிப்பிடும் வழிவகைகளும் காணப்படுகின்றன என கருதும் தொழில்கட்சி இதனை முன்நகர்த்துவதற்கான அரசியல் உறுதிப்பாடு இந்நாள் வரை போதிய அளவில் இல்லை எனவும் கருதுகின்றது.

தேர்தலில் நாங்கள் தெரிவு செய்யப்பட்டால் அரசாங்கத்தின் ஆதரவுடன் தமிழர் விவகாரம் மீண்டும் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும்.

என்னை தெரிவு செய்தால் நான் நீதிக்காக குரல்கொடுக்கும் ஏனைய வலுவான  குரல்களுடன் இணைந்துகொள்வேன்,தமிழ் மக்களிற்கும் முழு இலங்கைக்கும் அவசியமான உண்மை நீதி பொறுப்புக்கூறல் உண்மையான சமாதானம் என்பவற்றிற்கான குரல்கொடுப்பேன்.சர்வதேச அளவில் இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவதே இதற்கு மிகவும் அவசியமான விடயம் – தொழில்கட்சி இதனை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.

கடந்த மாதம் டிரவல்கர் சதுக்கத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.அது நம்பமுடியாத அளவிற்கு மனதை உருக்கும் ஒரு நிகழ்வு பல புலம்பெயர் தமிழர்கள் இன்றும் சுமந்துகொண்டிருக்கும் துயரங்கள் மற்றும் ஆறா வலிகளை அப்பட்டமான விதத்தில் நினைவுபடுத்தும் விதத்தில் அந்த நிகழ்வு காணப்பட்டது.

உண்மையில் இது 2003 இல் எனது தந்தையுடன் இலங்கைக்கு சென்றதை எனக்கு நினைவூட்டியது.மேலும் நான் பார்த்த இயற்கையான அழகு மற்றும் அதிர்ச்சியளிக்கும் அழிவுகளையும்- 2009க்கு முன்னரே தமிழர்களின் நாளாந்த வாழ்க்கை எப்படியிருந்தது என்பதையும் இது நினைவுபடுத்தியது.

தமிழ் இனப்படுகொலைநினைவு தினத்தை பிரிட்டன் அங்கீகரிப்பது முழு தமிழ் சமூகத்திற்கும் அவசியமானதொரு விடயம்.இதற்கு நான் ஆதரவளிப்பேன் கட்சியில் பரந்துபட்ட அளவிலும் – கட்சிக்கு வெளியே ஏனைய கட்சிகள் மத்தியிலும் இந்த விடயத்தை கொண்டுசெல்வேன்.

யுத்த குற்றவாளிகளை முழு பொறுப்புக்கூறலிற்கும் உட்படுத்துவதற்கு நாங்கள் நடைமுறையில் உள்ள பொறிமுறைகளை பயன்படுத்துவது அவசியம்.போர்க்குற்றங்களின் மாறுபாட்டை ஒருபோதும் மன்னிக்கூடாது.

அமெரிக்க காங்கிரசில் சுயநிர்ணய உரிமைக்கான சர்வஜனவாக்கெடுப்பை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது போல  பிரிட்டனிலும் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான பொறுத்தமான பொறிமுறைகள் இருந்தால் நான் நிச்சயமாக அதற்கு ஆதரவளிப்பேன் தமிழ் மக்களிற்கு சுயநிர்ணய உரிமை எவ்வளவு அவசியம் என்பதை நான் உணர்ந்துகொண்டிருக்கின்றேன்.