நீர்வெறுப்பு நோய்த்தாக்கம்: தொற்று நோய் வைத்தியர் ரஞ்சன் விளக்கம்

113 0

நீர்வெறுப்பு நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகும் ஒருவர் மிக விரைவாக இறந்துவிடக்கூடும் என்பதனால் இந்த விடயத்தை கவனமாக கையாள வேண்டி உள்ளது என கிளிநொச்சி மாவட்ட தொற்று நோய் வைத்தியர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி  பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் நீர் வெறுப்பு நோய் என சந்தேகிக்கப்படும் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த நோய் தொடர்பில் கூறக்கடமைப்பட்டுள்ளேன்.

நீர்வெறுப்பு நோயானது நாய், பூனை போன்ற பாலூட்டும் விலங்குகளால் எமக்கு தொற்றக் கூடிய ஒரு நோயாகும்.

நீர்வெறுப்பு நோய்த்தாக்கம்: தொற்று நோய் வைத்தியர் ரஞ்சன் விளக்கம் | District Infectious Disease Doctor Ranjan Speech

இந்த நோயானது கடி மற்றும் கீறல் மூலம் கடுமையாக தொற்றும் ஆற்றலைக் கொண்டதாகும்.

நாங்கள் வளர்க்கும் பிராணிகளுக்கு தடுப்புக்களை ஏற்றுவதன் மூலம் இந்த நோய் பரவலை தடுக்க முடியும்.

இந்த நோய் வெறுப்பு நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகும் ஒருவர் மிக விரைவாக இறந்துவிடக்கூடும். ஆகையால் நாங்கள் கவனமாக இந்த விடயத்தை கையாள வேண்டி உள்ளது.

இந்த நீர்வெறுப்பு நோயை தடுப்பதற்கு 3 விடயங்களை கையாளலாம். நாங்கள் ஒரு நாய்க்குட்டியை தத்தெடுத்தவுடன் முதல் 6 வாரத்துக்குள் முதலாவது ஊசியையும், 6ஆவது மாதத்தில் 2ஆவது ஊசியையும், அதனைத்தொடர்ந்து 1 வருடத்தில் மூன்றாவது ஊசியையும் செலுத்துவதுடன் பின்னர் வருடம் தோறும் ஊசியை வழங்குவதன் ஊடாக செல்லப்பிராணிகளிடமிருந்து பரவுவதை தடுக்கலாம்.

 

அவ்வாறு விலங்கினால் கடியுறுகின்ற போது, கிளிநொச்சி மாவட்டத்தில் 6 வைத்தியசாலைகளில் ARV தடுப்பூசியினையும், ARS தடுப்பூசியினையும் வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.

பளை, தர்மபுரம், பூநகரி, முழங்காவில், அக்கராயன் மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் ARV தடுப்பூசி வழங்கப்படுவதுடன், ARS என்கின்ற விசேட தடுப்பு மருந்தினை கிளிநொச்சி வைத்தியசாலையிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதைவிட விலங்குகளுக்கான தடுப்பூசிகள் கால்நடை வைத்தியர் குழுவிற்கு மேலதிகமாக எங்களுடைய பிராந்திய சுகாதார சேவையில் கீழ் ஒரு குழுவினர் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.