சீனாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களான லீ ஷாங்ஃபூ மற்றும் வெய் ஃபெங்கே இருவரும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நேற்று வியாழக்கிழமை (27) வெளியேற்றப்பட்டுள்ளனர். ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக இவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
வெய் ஃபெங்கே 2018 மார்ச் முதல் 2023 மார்ச் 11 ஆம் திகதிவரை வரை பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். மறுநாள் லீ ஷாங்பூ பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இரு மாத காலம், பொதுமக்கள் பார்வையிலிருந்து அவர் காணாமல் போயிருந்தார். அவருக்கு என்ன நடந்தது என கேள்வி எழுந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து லீ ஷாங்ஃபூ நீக்கப்பட்டுள்ளார் என கடந்த ஒக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் லீ ஷாங்ஃபூவும், வெய் ஃபெங்கேவும் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக சீன கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என சீன அரச ஊடகமான சி.சி.ரி.வி. நேற்று தெரிவித்துள்ளது.
லீ ஷாங்ஃபூ தனது பதவியைப் பயன்படுத்தி பெருந்தொகை லஞ்சம் பெற்றுக் கொண்டார் எனவும், ஏனையோருக்கு லஞ்சம் வழங்கினார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளர் என சி.சி.ரி.வி. தெரிவித்துள்ளது.
சீன மக்கள் குடியரசை ஸ்தாபித்த, சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஒரேயொரு ஆளுங்கட்சியாகவும் விளங்குகிறது. அந்நாட்டின் மிக சக்திவாய்ந்த அமைப்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது.
2012 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளராகவும், 2013 ஆம் ஆண்டு சீன ஜனாதிபதியாகவும் பதவியேற்ற ஸீ ஜின்பிங், அரச துறையின் ஊழல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
இந்நடவடிக்கை தூய்மையான அரசாங்கத்தை உறுதிப்படுத்துகிறது என இதை ஆதரிப்போர் கூறுகின்றனர்.
அதேவேளை, ஜனாதிபதி ஸீ ஜின்பிங் தனது அரசியல் எதிரிகளை களையெடுப்பதற்கு இது உதவுகிறது என இந்நடவடிக்கைகளை எதிர்ப்போர் விமர்சிக்கின்றனர்.

