மூதூர் இருதயபுரத்தில் மதுபானசாலை திறப்புக்கு எதிராக அக்கிராம மக்களால் கடந்த நாட்களில் இடம்பெற்றது. இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய கிரிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மிகவும் வருத்தத்துக்குரிய சம்பவம் அண்மையில் மூதூர் இருதயபுரத்தில் (சகாயபுரம்) நடைபெற்றதை கேள்விப்பட்டிருப்பீர்கள். நீதியையும் சமூக நலனையும் மனித உரிமையையும் கேள்விக்குறியாக்கும் வகையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
அமைதியாக இருந்த இருதயபுரக் கிராமத்தில் திட்டமிட்டு மதுபானக் கடையொன்றைத் திறப்பதற்கு முயற்சிகள் நடைபெற்றது. இதனை எதிர்த்து ஊர் மக்கள், நிறுவனங்கள், பாடசாலை, வழிபாட்டுத் தலங்கள், கடிதங்கள் எழுதி பிரதேச செயலாளருக்கும் ஆளுநருக்கும் மாவட்ட செயலாளருக்கும் கொடுத்திருந்தனர். இம்முயற்சி பலனளிக்காத நிலையில் அம் மக்கள் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடக்கும் முகமாக சிலரால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட சூழ்நிலையே இது. இதன் விளைவாக, பொலிஸார் மக்களை துரத்த இருதயபுர ஆலயத்துக்குள் தஞ்சமடைந்த மக்களையும் பொலிஸார் ஆலயத்தினுள் நுழைந்து அடித்து கைது செய்துள்ளனர். அமைதியாக நடைபெற்ற எதிர்ப்பு சூழ்நிலையில் இனம் தெரியாதோர் சிலர் உட்புகுந்து கலவரமாக்கியதை அவதானித்தவர்கள் குறிப்பிட்டனர்.
மதுபானசாலை திறப்பதற்கு உரிய அதிகாரிகளிடமிருந்து அனுமதி கிடைத்துள்ளதா என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது. பொலிஸார் இம்மக்களுக்கு எதிராக தடியடி பிரயோகம் செய்தது. ஆலயத்தினுள் சென்று ஆலயத்தையும் மக்களையும் துவம்சம் செய்தது மிகவும் மனவேதனையும் கண்டிக்கத்தக்க செயலுமாகும்.
எனவே, உரிய அதிகாரிகள் நேர்மையாக செயற்பட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதியும் சமூக அமைதிக்கான சூழ்நிலையையும் உருவாக்கித்தர வேண்டுமென வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம்.
இருதயபுர கிராமம் மதுபானமற்ற கிராமமாக உருவாக வேண்டும். இனம், சமூகம், கல்வியில் வளர வேண்டும். மக்கள் மத்தியில் ஆன்மிகம் வளர வேண்டுமென நாம் எடுத்த முயற்சிகள் பல. அனைத்தையும் தகர்ப்பதாகவே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே, நிலைமை வழமைக்கு திரும்ப உரிய அதிகாரிகள் வேண்டிய முயற்சிகளை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

