அமெரிக்காவின் 248வது சுதந்திர தின நிறைவை கொண்டாடிய அமெரிக்கத் தூதரகம்

125 0
கோல் ஃபேஸ் ஹொட்டேலில் ஜூன் 27ஆம் திகதி அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங் ஏற்பாடு செய்த ஒரு கொண்டாட்ட வைபவத்துடன் அமெரிக்க சுதந்திரத்தின் 248ஆவது ஆண்டு நிறைவை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கொண்டாடியது.

புகழ்பெற்ற இலங்கை அதிகாரிகள், இராஜதந்திரிகள் மற்றும் வர்த்தக, சிவில் சமூக மற்றும் ஊடகத்துறையினைச் சேர்ந்த பங்காளர்களுடன், இவ்வைபவத்தின் பிரதம விருந்தினரான சுற்றுலா, காணிகள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை அமெரிக்கத் தூதுவர் வரவேற்றார்.

நீண்டகாலம் நிலைத்திருக்கும் ஜனநாயக உணர்வையும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் வலுவான பங்காண்மையினையும் இவ்வருட அமெரிக்க சுதந்திரக் கொண்டாட்டம் எடுத்துக்காட்டியது.

ஜனநாயகம் மற்றும் அதன் விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கான பங்காண்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங்,

“இன்றிரவு நாம் அமெரிக்காவின் சுதந்திரத்தையும் எமது ஜனநாயகத்தின் பிறப்பையும் கொண்டாடுவது மாத்திரமன்றி, 248 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஜனநாயக இலட்சியங்களை நிலைநாட்டுவதற்கான நீடித்த போராட்டம் மற்றும் அதற்கான உறுதியான அர்ப்பணிப்பு என்பன தொடர்பாகவும் சிந்திக்கிறோம், ஜனநாயகத்தில் அமெரிக்காவின் சோதனை எவ்வாறிருக்கும் என்பது பற்றி அப்போது எதுவும் நிச்சயமாகத் தெரிந்திருக்கவில்லை.

எமது கொள்கைகள், அபிலாஷைகள் மற்றும் தொலைநோக்கு என்பன தொடர்பான ஒரு துணிச்சலான அறிக்கையுடன் நாம் எமது சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினோம்.

இந்த உண்மைகள் வெளிப்படையானவை என நாங்கள் வெளிப்படுத்துகிறோம். எல்லா மனிதர்களும் சமமாக படைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை படைத்தவரால் சில மறுக்க முடியாத உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவ்வுரிமைகளுள் உயிர் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரமாக இருப்பதற்கான உரிமை மற்றும் மகிழ்ச்சியினை நாடிச் செல்வதற்கான உரிமை என்பனவும் அடங்குகின்றன. இந்த உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, ஆளப்படுபவர்களின் சம்மதத்திலிருந்து தமக்குரிய நியாயமான அதிகாரங்களைப் பெறுகின்ற அரசாங்கங்கள் மனிதர்களிடையே நிறுவப்படுகின்றன. ஆனால் அமெரிக்க ஜனநாயகம் இந்தப் பிரகடனத்துடன் ஆரம்பித்து அரசியலமைப்பு உருவாக்கத்துடன் முடிவடையவில்லை.

ஜனநாயகம் நிலையான ஒரு நிலை அல்ல; அது ஒரு செயல்முறையாகும். அடிப்படைக் கொள்கைகளுக்கான அர்ப்பணிப்புகளை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டிருக்கும் செயல்முறையாகும்.

ஒரு தேசம் ஸ்தாபிக்கப்பட்டதை மட்டும் நாம் இன்றிரவு நினைவுகூரவில்லை. மாறாக எம்மையும் அமெரிக்க-இலங்கை பங்காண்மையினையும் வரையறை செய்யும், நீண்டகாலமாக நிலைத்திருக்கும் ஒற்றுமை உணர்வையும் சுதந்திர உணர்வையும் நாம் நினைவுகூருகிறோம்” என தூதுவர் சங் மேலும் கூறினார்.

ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இருதரப்பு உறவுகள் மற்றும் அதை விட அதிக காலமாக காணப்படும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்புகள் ஆகியவற்றுடன் இராஜதந்திரம், வர்த்தகம், கலாசாரம் மற்றும் பல விடயங்களில் எமக்கிடையே காணப்படும் பொதுவான ஜனநாயக விழுமியங்களையும் மற்றும் நலன்களையும் மேம்படுத்தி அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காண்மையானது தொடர்ந்து பலமடைகிறது.

பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல், எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துதல், மக்களிடையே தொடர்புகளை கட்டியெழுப்புதல் மற்றும் கல்வி மற்றும் ஆங்கில மொழியினைக் கற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் நாடு கடந்த அச்சுறுத்தல்களை முறியடித்தல் போன்ற பரப்புகளில் இலங்கையுடனான பங்காண்மையினைப் பேணுவதில் அமெரிக்கத் தூதரகம் கொண்டுள்ள உறுதிப்பாட்டினை 2024 சுதந்திர தின கொண்டாட்டம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

முன்னோக்கிப் பார்க்கையில், எதிர்காலத்தில் இன்னும் பலமான ஒரு அமெரிக்க-இலங்கை உறவை கட்டியெழுப்புவதற்கான ஒரு தொலைநோக்கினை பிரதிபலிக்கும் வகையில் இரு நாடுகளும் அனைத்து துறைகளிலும் தமது ஒத்துழைப்பை ஆழப்படுத்தவுள்ளன.

“American Neighborhood Block Party” எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வானது அமெரிக்க சுற்றுப்புறங்களில் நடைபெறுவதைப் போன்ற பண்டிகைக் கால கொண்டாட்டத்தினை இங்கே கொழும்பில் மீளுருவாக்கம் செய்தது. இதில் அமெரிக்கா முழுவதும் இடம்பெறும் ஜூலை 4ஆம் திகதிய கொண்டாட்டங்கள் மற்றும் மிகச் சிறந்த அமெரிக்காவுக்குரிய விளையாட்டுக்கள் ஆகியவற்றின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் கண்காட்சியும் நடைபெற்றது.

அமெரிக்க சுற்றுப்புறங்களில் நடைபெறும் ஒரு பொதுவான விருந்தின் சமூகத்தை மையமாகக் கொண்ட உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது விருந்தினர்களை துடிப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஓர் ஒழுங்கமைப்பில் ஒன்றிணைத்து பொழுதுபோக்கு நடவடிக்கைகள் நிறைந்த ஒரு மாலைப் பொழுதை வழங்கியது. இந்த சிறப்பு நிகழ்வின் ஆனந்தம் மற்றும் ஒற்றுமைக்கான ஒரு சான்றாக, Galle Face Greenஇல் இடம்பெற்ற ஒரு வாணவேடிக்கையுடன் கொண்டாட்டம் நிறைவடைந்தது.

மேலதிக விபரங்களுக்கு பின்வரும் சமூக ஊடகப் பக்கங்களில் எம்மைப் பின்தொடரவும்:

முகநூல் https://www.facebook.com/USEmbassyColombo,

இன்ஸ்டகிராம்  https://www.instagram.com/usembassycolombo, அல்லது

ட்விட்டர் https://twitter.com/USEmbSL.

 

அமெரிக்க சுதந்திரத்தின் 248 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் உரையாற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங்.  

ஜூலை 4 கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடும் விருந்தினர்கள்.

அமெரிக்கக் கொடியினை வைபவ ரீதியாக அமெரிக்கத் தூதுவரிடம் வழங்கும் அமெரிக்க மரைன் படையினர்.

அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் கையெழுத்தானதன் 248ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் விருந்தினர்களுடன் உரையாடும் அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங்.