இரண்டு நீதிபதிகளையும் பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைத்து விசாரிக்கவும்

111 0

பாராளுமன்றத்தில் நான் தெரிவித்த கருத்தொன்று தொடர்பில் நீதிச்சேவை சங்கத்தின் தலைவர் மாவட்ட நீதிபதி ருவன் திஸாநாயக்க மற்றும் செயலாளர் இசுரு நெத்திகுமாரகே ஆகிய இருவரும் பகிரங்கமாக கருத்து தெரிவித்து ஒழுக்கயீனமாக செயற்பட்டுள்ளனர். இந்த இரண்டு நீதிபதிகளையும் பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள்தொடர்பான குழுவுக்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இதுதொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக கடந்த 19ஆம் திகதி நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றில் எழுப்பிய பல கேள்விகளுக்கு நான் பதிலளித்திருந்தேன். அது தொடர்பில் நீதிச்சேவை சங்கத்தின் தலைவர் மாவட்ட நீதிபதி ருவன் திஸாநாயக்க மற்றும் செயலாளர் இசுரு நெத்திகுமாரகே ஆகிய இருவரும் பகிரங்கமாக கருத்து தெரிவித்து ஒழுக்கயீனமாக செயற்பட்டுள்ளனர். அதனால் குறித்த இரண்டு நீதிபதிகளையும் பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள்தொடர்பான குழுவுக்கு அழைத்து விசாரித்து, முறையான உத்தரவொன்றை வழங்கவேண்டும்.

நீதித்துறையில் இடம்பெற்றிருக்கும் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நீதிபதிகள் இருவரும் அந்த ஆராய்ச்சி செயற்பாடுகளை சீர்குலைத்து நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகளை தடுப்பதற்கு முயற்சித்துள்ளனர். நீதித்துறையில் சட்டவிராே நடவடிக்கைகள் வெளிப்பட்டுள்ள நிலையில் அவை தொடர்பில் நடவடிக்கை எடுப்பது அனைத்து நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளின் பாெறுப்பாக இருக்கும்போது, எனது அந்த வெளிப்படுத்தல் தொடர்பில் தீங்கிழைக்கும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

நீதித்துறையில் இடம்பெற்றிருக்கும் குற்றச்செயல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நான் வெளிப்படுத்திய பின்னர் 30க்கும் மேற்பட்ட நீதிபதிகள் அது தொடர்பில் எனக்கு நன்றி தெரிவித்திருந்தனர்.

எனவே நான் பாராளுமன்றத்தில் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் குறித்த இரண்டு நீதிபதிகளும் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு, நீதிமன்ற விடயதானங்களின் ஒரு பகுதியாக அல்லாமல்  தனிப்பட்ட அல்லது தனிப்பட்ட ரீதியில் ஏற்படுத்திக்கொண்ட விடயமாகும். அதனால் அவர்களின் செயற்பாடு பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமை சட்டத்தை மீறும் என்பது தெளிவாகிறது.

எனவே இந்த இரண்டு நீதிபதிகளையும் பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள்தொடர்பான குழுவுக்கு அழைத்து விசாரித்து, முறையான உத்தரவொன்றை வழங்கவேண்டும்.