கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த பிரச்சினையை நாங்கள் நிராகரிக்கவில்லை எனப் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) எம்.பிக்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி குறிப்பிடுகையில்,
கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் தொடர்ந்து மூன்று மாதங்களாகப் போராட்டம் இடம்பெற்று வருகிறது. இது தொடர்பாக உங்களுடன் தொலைபேசியிலும் கதைத்தோம். உங்களது காரியாலயத்துக்கும் வந்து கலந்துரையாடி இருந்தோம். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அங்கு வந்து இதுதொடர்பாக பார்ப்பார் என நீங்கள் தெரிவித்தீர்கள். ஆனால் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் இதுவரை அங்கு வந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
இதற்கு பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
கல்முனை பிரதேச செயலக பிரச்சினை தொடர்பில் தேடிப்பார்த்து தீர்வுகாண அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு தேவையான ஆலாேசனைகளை நாங்கள் வழங்கி இருக்கிறோம். அதன் பிரகாரம் கணக்காய்வாளர் ஒருவர் நடமாடும் வகையில் செயற்பட்டு், அந்த காரியாலயத்தில் பொது மக்களுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
அதேபோன்று கல்முனையில் போராட்டம் ஒன்று இடம்பெறுகிறது. என்றாலும் உயர் நீதிமன்றில் வழக்கொன்று இருப்பதால், அந்த பிரதேசத்தில் சில நிர்வாக மறுசீரமைப்புகளை மேற்கொள்வது தொடர்பில் பிரச்சினை இருக்கிறது. அதனால் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டதன் பிரகாரம், கல்முனை பிரச்சினை தொடர்பாக எமது அமைச்சின் செயலாலருடன் கல்முனைக்கு சென்று, கலந்துரையாடலின் மூலம் இந்த பிரச்சினைக்குத் தீர்வுகாண நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இந்த பிரச்சினையை நாங்கள் நிராகரிக்கவில்லை என்றார்.

