பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று பிற்பகலில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இருப்பினும், நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது உடமை சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.நிலநடுக்கம் குறித்து தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, “ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் 98 கிலோமீட்டர் ஆழத்தில் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர், ஸ்வாட், மலகாண்ட், வடக்கு வஜிரிஸ்தான், பராச்சினார், லோயர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியா மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகளின் எல்லையில் பாகிஸ்தான் அமைந்துள்ளதால், பாகிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது.இந்த மாத தொடக்கத்தில், கராச்சியில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.மேலும், பாகிஸ்தானில் கடந்த 2005ம் ஆண்டில் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 74,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

