தலவாக்கலை – டயகம பிரதான வீதி பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை செலுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்து தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் சேவையில் ஈடுபட்டுவரும் அனைத்து தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் நேற்று திங்கட்கிழமை (18) நாகசேனை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக டயகம – தலவாக்கலை, தலவாக்கலை – எல்ஜின் மற்றும் தலவாக்கலை – இராணிவத்தை ஆகிய இடங்களுக்கு இவ்வீதி வழியாக பயணிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்களும் சாரதிகளும் கலந்துகொண்டனர்.

லிந்துலை நகரிலிருந்து டயகம வரையிலான 21 கிலோமீற்றர் தூரம் மிகவும் சேதமடைந்துள்ளதாகவும் மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் இந்த வீதி காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேருந்து சாரதிகள் தெரிவித்தனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய அரசு இந்த வீதியை கார்பெட் இட்டு புனரமைப்பு செய்வதாகக் கூறி வீதியின் இருபுறமும் பல கிலோ மீற்றடர் தூரம் அகலப்படுத்தியதாக மக்கள் கூறுகின்றனர்.
டயகம, அக்கரப்பத்தனை, போபத்தலாவ, மெனிக்பாலம், மன்ராசி, ஹோல்புரூக், திஸ்பனை, மெரயா, எல்ஜின், இராணிவத்தை போன்ற பல தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் நாள்தோறும் தலவாக்கலை டயகம வீதியை போக்குவரத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வீதி சேதமடைந்து காணப்படுவதனால் பாடசாலை மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், ஏனைய பயணிகள் உள்ளிட்டோர் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே இவ்வீதியை உடனடியாகத் புனரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாரதிகள் கோரிக்கை விடுத்து இந்த ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டதோடு நேற்று பணிபகிஸ்கரிப்பிலும் ஈடுப்பட்டனர் .



