களுத்துறை துப்பாக்கிச் சூடு; பிரதான சந்தேக நபர் கைது

106 0

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி நபரொருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று (16) மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கடந்த 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மீகொடை பிரதேசத்தில் வைத்து நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதான சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கி மற்றும் 15 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிரதான சந்தேக நபர் வெளிநாட்டில் உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த நபரொருவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.