2023 ஆரம்பம் முதல் 2024 மே மாதம் வரை உலகில் சுமார் 120 மில்லியன் மக்கள் பலவந்தமாக இடம்பெயரச் செய்யப்பட்ட நிலையில் இருந்தனர் என ஐ.நா வியாழக்கிழமை (13) தெரிவித்துள்ளது.
அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயத்தின் அறிக்கையொன்றில் இத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தோர், நாடாற்ற நிலையில் உள்ளவர்கள் குறித்த புள்ளிவிபரங்கள் இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.
2023 இறுதியில், துன்புறுத்தல்கள், சண்டைகள், வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் படுமோசமான சட்டம் ஒழுங்கு மீறல்களிலிருந்து தப்புவதற்காக உலகில் 117.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர் என மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 120 மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் இடம்பெயர்ந்திருந்தனர். இது 2022 ஆம் ஆண்டின் நிலைமையைவிட 10 சதவீதம் அதிகமாகும். இந்த எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 1.5 சதவீதமாகும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் அளவிலான இடப்பெயர்வுகளுக்கு மோதல்களே காரணமாக இருந்தன என அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார்.
“சர்வதேச புவிசார் அரசியலில் மாற்றமொன்று ஏற்பட்டால் தவிர, துரதிஷ்டவசமாக இந்த எண்ணிக்கை உயர்வடையும் நிலையையே நான் காண்கிறேன்” என அவர் கூறினார்.
“தொடர்ச்சியாக 12 ஆவது வருடமாக அதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 114 மில்லியனிலிருந்து 120 மில்லியனாக அது அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கைக்குப் பின்னால் பல மனித துயரங்கள் உள்ளன. ஒற்றுமை மற்றும் ஒருமுகப்பட்ட செயற்பாடுகள் மூலமே இத்துயரங்களைப் போக்க முடியும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2023 ஏப்ரலில் ஆரம்பமான சூடான் மோதல் காரணமாக, உலகின் மிகப் பெரிய மனிதாபிமான மற்றும் இடம்பெயர்வு பிரச்சினையொன்று ஏற்பட்டதாகவும் இதனால் 2023 டிமெம்பர் வரை 6 மில்லியன் பேர் இடம்பெயர்ந்திருந்தன்ர எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தொடரும் காஸா யுத்தம் காரணமாக 1.7 மில்லியன் பேர், அதாவது காஸா மக்களில் 75 சதவீதமானோர் காஸாவுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீனத்துக்கான ஐ.நா நிவாரண முகவரத்தின் (UNRWA) தகவலின்படி, 60 இலட்சம் பலஸ்தீனர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும், அவர்களில் சுமார் 1.6 மில்லியன் பேர் காஸாவில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
மியன்மார், ஆப்கானிஸ்தான், உக்ரேன், கொங்கோ ஜனநாயகக் குடியரசு, சோமாலியா, ஹெய்ட்டி, சிரியா, ஆர்மேனியா ஆகிய நாடுகளிலிருந்தும் மோதல்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகளில் பெரும்பாலானோர் செல்வந்த நாடுகளையே நாடுவதாக எண்ணப்படுகின்ற போதிலும், அவர்களில் 75 சதவீதமானோர் குறைந்த மற்றும நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்குச் சென்றுள்ளனர் எனவும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், புதிய புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களில் அரைப்பங்கு 5 நாடுகளுக்கே கிடைத்துள்ளதாகவும் ஆகக்கூடுதலாக அமெரிக்காவுக்கு 1.2 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


