பங்களாதேஷ் பிரஜையை திருமணம் செய்த பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

15 0

ஹொரணை, மீவனபலன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (11) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

ஹொரண மீவனபலன பகுதியை சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் பங்களாதேஷ் பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் பின்னர் இலங்கை வந்து தனது தங்கையுடன் வீட்டில் ஒன்றாக வசித்து வந்ததாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது உயிரிழந்தவரும் அவரது சகோதரியும் வீட்டின் கதவை மூடி உறங்கச் சென்றுள்ள நிலையில் முகத்தை மூடிக்கொண்டு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சந்தேக நபர்கள் இருவர் சகோதரியின் கைகளை கட்டி வைத்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்தவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.