13ஆம் திருத்தம் நலிவடைந்து விட்டது – சஜித்திற்கு சுமந்திரன் எடுத்துரைப்பு

44 0

அதிகார பகிர்வு குறித்து தமிழ் , சிங்கள மக்கள் தெளிவாக, விபரமாக அறியக் கூடியவாறு தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசவிடம் கூறினோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும் , ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தமிழரசு கட்சியினரை , யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் திங்கட்கிழமை (10) இரவு சந்தித்தார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன் அவ்வாறு தெரிவித்தார்.

அதிகார பகிர்வு சம்பந்தமாக எங்களுக்கு இருக்கிற ஏமாற்றங்கள், தொடர்பில் எடுத்துக் கூறினோம். நாங்கள் வேண்டாம் எனக் கூறும் 13ஆம் திருத்தத்தைக் கூட மிக மோசமான நிலைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளார்கள். கொடுத்ததை கூட சூழ்ச்சிகள் ஊடாக மீளப் பெற்றுக்கொள்கின்றார்கள். அதனால் இப்போது அது மிக நலிவடைந்து காணப்படுகிறது. 13ஆம் திருத்தத்தை அமுல் படுத்துவேன் எனக் கூறுவதில் கூட இன்றைக்கு அர்த்தம் இல்லாத நிலைமை காணப்படுகிறது எனக் கூறினோம்.

எதிர்க்கட்சி தலைவர் தனது நோக்கு குறித்துக் கூறுகையில், கிராமங்கள் நகரங்களைக் கட்டி எழுப்பி அதனூடாக பிரதேசத்தைக் கட்டியெழுப்பி அதன் பின்னரே மாவட்டம், மாகாணம் நாடு என்பதே தன்னுடைய கோட்பாடு என்று கூறியிருந்தார்.

விசேடமாக நிதி பகிர்வு குறித்துக் கூறினார்.  அதிகார பகிர்வினை கொடுத்து விட்டு, நிதி பகிர்வை கொடுக்காவிடில் அதில் பயனில்லை என்றும் கூறினார்.

அதேவேளை இனங்கள் மத்தியில் உள்ள பரஸ்பர நம்பிக்கையீனத்தை இல்லாதொழிக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும் என எம்மிடம் கூறினார்

அதன் பின்னர் நாம் எதிர்க்கட்சி தலைவரிடம், தமிழ் மக்களின் அடையாளம் பேணப்பட வேண்டும். தமிழர்களின் பூர்வீகமான நிலப்பரப்பான வடக்கு கிழக்கு தாயகம்  இணைந்ததாகப் பூரண அதிகார பகிர்வு வேண்டும். அது  அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்

எமது மக்கள் எதிர்பார்க்கும் அதிகார பகிர்வு பற்றிப் பேசாமல் வேறு விடயங்களைச் சொல்வது அதிகார பகிர்வு குறித்துச் சொல்லாது தப்பியோடுவதாக இருக்கக் கூடாது.

அதிகார பகிர்வு தொடர்பில் விபரமாகத் தமிழ் சிங்கள மக்களுக்குச் சொல்ல வேண்டும் எனக் கூறினோம்.

தனது தேர்தல் அறிக்கையில் அது குறித்துத் தெளிவாகக் கூறுவேன் என்றார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூறியதை வைத்துத் தான் தமிழ் மக்கள் உங்களுக்குப் பெருவாரியாக வாக்களித்தனர். எனக் கூறி , நீங்கள், கொடுக்கும் வாக்குறுதியை முழு நாட்டிற்கும் சொல்ல வேண்டும். அதனை வைத்துத் தான் நாம் தீர்மானிப்போம், என எதிர்க்கட்சி தலைவரிடம் கூறினோம்.

தேர்தலில் தமக்கு ஆதரவு தாருங்கள் என வெளிப்படையாகக் கேட்கவில்லை. ஆதரவினை பெறும் நோக்குடனான சந்திப்பாகவே இது அமைந்தது என மேலும் தெரிவித்தார்.