ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் அதிகளவு ஆசனங்களை கைப்பற்றும் நிலையில் தீவிரவலதுசாரிகள்

53 0

ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சிகள் பெரும் வெற்றிபெறலாம் என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியதை தொடர்ந்து ஐரோப்பாவில் நிச்சயமற்ற நிலை மேலும் அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளில் மூன்று நாட்கள் இடம்பெற்ற தேர்தலின் முடிவுகள் வெளியாக தொடங்கியுள்ள நிலையில் தீவிரவலதுசாரி கட்சிகள்  குறிப்பிடத்தக்க வெற்றியை பெறலாம் என முன்கூட்டிய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

720 ஆசனங்களில் 150க்கும் அதிகமான ஆசனங்களை வலதுசாரி கட்சிகள் கைப்பற்றலாம் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

பிரான்ஸ் இத்தாலி ஜேர்மனி போன்ற அதிக ஆசனங்களை கொண்டுள்ள நாடுகளில் தீவிரவலதுசாரிகள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பிரான்சில் மரைன் லெ பென்னின் தீவிரவலதுசாரி கட்சி வெற்றிபெறும் என்பது கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்ததை தொடர்ந்து பிரான்ஸ் பிரதமர்இமானுவேல் மக்ரோன்  நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கான புதிய திகதிகளை அறிவித்துள்ளார்.

தீவிரவலதுசாரி கட்சி 31 வீத வாக்குகளை பெறும் மக்ரோனின் ரெனசான்ஸ் கட்சிக்கு 15 வீத வாக்குகளே கிடைக்கும்  என முன்கூட்டிய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.சோசலிச கட்சிக்கு 14 வீத வாக்குகள் கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

பிரான்ஸில் மக்ரோனிற்கு ஏற்பட்ட பின்னடைவை போன்று ஜேர்மனியில் சான்சிலர் ஒலாப் ஸ்கோல்சும் பின்னடைவை சந்தித்துள்ளார். அவருடைய சோசல் டெமோகிரட் கட்சிக்கு 14 வீத வாக்குகளே கிடைக்கும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சிக்கு 29வீத வாக்குகள் கிடைக்கும் தீவிரவலதுசாரி கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி 16.5 வீத வாக்குகளை பெறும் என  கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த தேர்தல் முடிவுகள் அடுத்த ஐந்து வருடகாலத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் பாதையை தீர்மானிக்கும்.

இந்த தேர்தல் முடிவுகள் தற்போது ஐரோப்பாவில் ஆளும் அரசாங்கங்கள் மீதான மக்களின் கருத்தினை வெளிப்படுத்துபவையாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.