ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தாம் எதிர்நோக்குவதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கிய உத்தரவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
07ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த ஹர்ஷ டி சில்வா, பல சவால்களுக்கு மத்தியில் தான் நிதிக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.
தமக்கு அலுவலகம் இல்லை எனவும், சேவை செய்வதற்கு மூன்று பேர் மட்டுமே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ஹர்ஷ டி சில்வா, சில சமயங்களில் தமது தனிப்பட்ட பணத்தில் அவர்களுக்கு பணம் கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நிலக்கரி விவகாரம், சீனி மோசடி, மத்திய வங்கியின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து நிதிக் குழு தொடர்ந்தும் பேசி வருவதாகத் தெரிவித்த எம்.பி., பல பிரச்சினைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
யாருடைய நலன்களுக்காக இப்படிச் செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், தன் உயிர் பாதிக்கப்பட்டால் சபாநாயகருக்கும் பொறுப்பு உண்டு என்றார்.

