அரசாங்கம் எடுக்கும் சகல தீர்மானங்களையும் எதிர்க்கும் நிலைப்பாட்டில் எதிர்க்கட்சி இல்லை. சிறந்த தீர்மானங்களுக்கு நாட்டுக்காக ஒத்துழைப்பு வழங்குவோம். 20 காலப்பகுதியில் முன்வைத்த பொருளாதார கொள்கையை புதுப்பித்து சிறந்த பொருளாதார கொள்கையை வெகுவிரைவில் பகிரங்கப்படுத்துவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்துக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனெனில், இந்த சட்டம் நிச்சயம் இயற்றப்பட வேண்டும். தற்போது இயற்றப்படுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். அதேபோல் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை மீள்பரிசீலனை செய்வது சிறந்தது என்பதையும் குறிப்பிட்டுக்கொள்கிறோம்.
இதன்போது எழுந்து உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தற்போதைய தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக நீங்கள் குறிப்பிடுவது சிறந்தது. அதேபோல் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு தெளிவுபடுத்துங்கள். ஏனெனில், அவர் உங்களின் இணக்கப்பாட்டையும் இல்லாதொழிக்கிறார் என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய ஹர்ஷ டி சில்வா, அவ்வாறில்லை… நீங்களும் நாங்களும் மக்களுக்காகவே செயற்படுகிறோம். இடைப்பட்ட காலத்தில் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றமடையவில்லை என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. 09 மாதத்துக்கு மாத்திரம் அஸ்வெசும வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், தற்போது 12 மாதங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட கடன் வழங்கல் நீடிக்கப்பட்டுள்ளது. ஆகவே, சமூக கட்டமைப்பு முன்னேற்றமடையவில்லை என்பது இதனூடாக வெளிப்படுகிறது. மக்கள் வாழ்வதற்கு போராடுகிறார்கள் என்பதே உண்மை. இதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.
நாங்கள் பொறுப்பான எதிர்க்கட்சி அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை. சிறந்த விடயங்களுக்கும், தீர்மானங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குவோம். அரச நிர்வாக கட்டமைப்பு இலத்திரனியல் மயப்படுத்தப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறேன். ஏனெனில், 21ஆம் நூற்றாண்டில் கோப்பு பயன்பாடு குறைவடைந்துள்ளது. ஆகவே, அஸ்வெசும நலன்புரித் திட்டங்கள் தொடர்பான தரவுகள் இலத்திரனியல் மயப்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார குழுவினர் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் விவாதிக்க சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தோம். எவரும் முன்வரவில்லை. எதனையும் மறைக்க வேண்டிய தேவையில்லை. எமது பொருளாதார கொள்கையை 2022ஆம் ஆண்டு வெளிப்படுத்தினோம். ஒருசிலர் அவற்றை பிரதி எடுத்துக்கொண்டு பேசுகிறார்கள்.
ஆரம்பத்தில் வெளியிட்ட பொருளாதார கொள்கை தொடர்பான திட்டத்தை புதுப்பித்து எதிர்வரும் வாரமளவில் புதிய திட்டத்தை பகிரங்கப்படுத்துவோம். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும், நாட்டின் கடனை நிலைபேறான தன்மையில் பேணுவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு நாங்கள் குறிப்பிட்டோம். 2020ஆம் ஆண்டு பல முறை நான் குறிப்பிட்டேன்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தனியார் ஊடகத்தில் இடம்பெற்ற கருத்தாடலின்போது சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லுமாறு நான் குறிப்பிட்டேன். தேசிய மட்டத்தில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய தேவை கிடையாது என்று தற்போதைய நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அன்று குறிப்பிட்டார். இன்று ஏதும் தெரியாதது போல் பேசுகிறார்.
நாட்டுக்காக மாற்றமடைந்திருந்தால் அதனை வரவேற்கிறோம். 2021ஆம் ஆண்டு நாங்கள் குறிப்பிட்டதை ஏற்றுக்கொண்டிருந்தால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருக்காது. நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின், எதிர்க்கட்சிகள் குறிப்பிடும் விடயங்களுக்கும் மதிப்பளியுங்கள். இல்லாவிடின், பாரிய எதிர்விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும் என்றார்.

