மின் கட்டணம் குறைக்கப்பட்ட பின் 40 இலட்ச மின்பாவனையாளர்கள் பயனடைவார்கள்

133 0

மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இன்று அல்லது நாளை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைப்போம். எதிர்வரும்  மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் மின்கட்டணம் குறைக்கப்படும். 68 இலட்ச மின்பாவனையாளர்களில் 40 இலட்சம் மின்பாவனையாளர்கள் பயனடைவார்கள் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மின்னுற்பத்திக்கான செலவுகளை ஈடு செய்யும் வகையில் மின்கட்டணம் திருத்தம் செய்யாமல் இருந்திருந்தால் மின்விநியோக கட்டமைப்பில் எழுந்த பிரச்சினைகளுக்கு இன்றும் தீர்வு கண்டிருக்க முடியாது.மின்கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனையை இன்று அல்லது நாளை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைப்போம்.

நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் திருத்தம் தொடர்பான கொள்கை காணப்படுகிறது.இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதனை புதிதாக குறிப்பிட வேண்டிய தேவை கிடையாது.இதற்கமைய மின்கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனையை கடந்த வாரம் நிறைவு செய்தோம்.

இதற்கமைய எதிர்வரும்  ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் மின்கட்டணம் குறைக்கப்படும்.குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும்,வீட்டு மின்பாவனையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும். 0-30 வரையான அலகுகளை கொண்ட மின்பாவனைகளில் ஒரு அலகுக்கு  தற்போது அறவிடப்படும் 8 ரூபாவை 6 ரூபாவாக குறைப்பதற்கும்,

30 -60 மின்பாவனையில் ஒரு அலகுக்காக அறவிடப்படும்  20 ரூபாவை 09 ரூபாவாகவும்,  60-90 வரையான அலகுகளில் ஒரு அலகுக்கு அறவிடப்படும் 30 ரூபாவை 18 ரூபாவாக குறைப்பதற்கும்,120 மின்பாவனையில் ஒரு அலகுக்கு  அறவிடப்படும் 50 ரூபாவை 30 ரூபாவாக குறைப்பதற்கும்  திருத்தங்கள் முன்வைக்கப்படும்.

68 இலட்ச மின்பாவனையாளர்களில் ஏறத்தாழமாக  40  இலட்சம் மின்பாவனையாளர்களுக்கு மின்கட்டணம் திருத்தம் ஊடாக நிவாரணம் வழங்கப்படும். அதேபோல் மத தலங்கள், பாடசாலைகள், அரச நிறுவனங்கள் ஆகியவற்றின் மின்கட்டணம் குறைக்கப்படும். எமது யோசனைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைப்போம்.கட்டணம் மேலும் குறைக்க வேண்டும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டால் அதனையும் ஏற்போம் என்றார்.