இன்றைய சமுதாயத்தில் தலைமைத்துவத்துக்கு வெற்றிடம் நிலவுகிறது என யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் இ. சுரேந்திரகுமார் தெரிவித்தார்.
செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகனின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு அறநிதியச் சபையால் நடத்தப்பட்ட இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (02) தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அமைந்துள்ள அன்னபூரணி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இன்றைய சமுதாயத்தில் தலைமைத்துவத்துக்கு பெரும் வெற்றிடம் நிலவுகிறது. இந்த வெற்றிடம் அரசியல் தலைமைத்துவத்திலும் சமுதாய தலைமைத்துவத்திலும் நிலவுகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு புதிய தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும்.
ஒரு சமுதாயம் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்டு, அது முறையாக நிர்வகிக்கப்பட்டு வந்தால்தான் எதிர்கால சமுதாயத்தை நிலையாக உருவாக்க முடியும்.
இன்றைய சூழலில் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அது அவர்களுடைய தவறு அல்ல. அவர்களுக்கான சரியான பாதையை காட்டமுடியாததுதான் இதற்கு காரணம். வெளிநாடுகளில் உள்ள தமது சகோதரர்கள், நண்பர்கள் போல் தாமும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனை தவறு என்று கூறமுடியாது. ஆனால், அவர்கள் சமுதாயத்துக்கு உதவிகளை செய்யவேண்டும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
இன்றைய கல்வி முறையில் மாற்றங்களை செய்ய வேண்டும். தற்போதைய கல்வி முறையானது லிகிதர்களையும் நிர்வாக உத்தியோகத்தர்களையுமே உருவாக்குகிறது.
சிந்திக்கத்தக்க தத்துவ ஞானிகளையும் விஞ்ஞானிகளையும் பொருளாதார வல்லுநர்களையும் உருவாக்குவதற்கான கல்வி முறை அவசியம். வெளிநாடுகளில் இதனையே செய்கிறார்கள். இளையோரை வழிநடத்தும் கட்டமைப்புகள் கொண்ட நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
இன்றைய இளைய தலைமுறை ஆற்றலாளர் விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியர் ஆவார். அவருடைய சேவை எவ்வாறு உள்ளது என்பது யாவரும் அறிந்ததே.
அவர் கொழும்பில் சிறந்த பணிகளை செய்து வருகிறார். மற்றொருவர் பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்த சிறுவன். இந்த சிறுவனை ஊக்கப்படுத்திய பெற்றோரை பாராட்டவேண்டும். நீச்சலில் மட்டுமல்ல, கல்வியிலும் அவன் சிறந்து விளங்க வேண்டும். நீச்சல் வீரர் எனும்போது ஆழிக்குமரனை யாரும் மறந்துவிட முடியாது.
ஆனால், இன்று எங்கு நீச்சல் தடாகம் உள்ளது. ஆழிக்குமரன் உறவுகளிடம் உள்ளது. யாழில் மத்திய கல்லூரியில் நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டுள்ள போதிலும், அது இன்று பயன்பாடின்றி, சேதமடைந்த நிலையில் உள்ளது.
நீச்சல் விளையாட்டில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. அதன் சாதகங்களை ஆராய்வதும் இல்லை. வயோதிபர்களுக்கு நீச்சல் சிறந்த உடற்பயிற்சியாகும். இது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். சமூகத்துக்கு செய்யவேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.
சமுதாயத்தில் அறப்பணி செய்யும் அமைப்புகளுக்கு உதவும் மனப்பான்மை வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு இருப்பது போல் உள்நாட்டில் உள்ளவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை இருக்க வேண்டும். சமுதாயத்தை நல்வழிப்படுத்துவதற்கு கலாநிதி ஆறுதிருமுருகன் போல் பலர் தேவைப்படுகின்றனர். அவர்களை இனங்கண்டு உற்சாகப்படுத்தவேண்டும் என்றார்.

