திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் உயர்தரப் பரீட்சை எழுதிய எழுபது மாணவியரது பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சிரமப்பட்டு கல்வி கற்று பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர்கள் என தெரிவித்துள்ளார், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்.
பர்தா அணிந்து பரீட்சை மண்டபத்துக்கு சென்றதால் அவர்களுடைய அடையாளம் சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டு ஸாஹிரா கல்லூரி மாணவர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (4) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு அவர் இது தொடர்பாக கூறுகையில்,
இவ்விடயம் தொடர்பில் நானும் பரீட்சை திணைக்களத்துக்கு சென்று உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். ஓரிரு வாரங்களுக்குள் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடவிருப்பதாக தெரிவித்தனர்.
பெறுபேறுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துநகர் பிரதேசமானது சுமார் 1970ஆம் ஆண்டு முதல் விவசாயம் செய்துவந்த காணிகளை தனியாருக்கு கொடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
அம்மக்களின் வாழ்வாதாரங்கள் அந்த விவசாய காணியிலேயே தங்கியிருப்பதால் அக்காணிகளை இலங்கை துறைமுக அதிகார சபைக்கு வழங்கி, தனியாருக்கு வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும்.
அதேபோல் நல்லாட்சி காலப்பகுதியில் வழங்கப்பட்ட திட்ட உதவியாளர் நியமனமானது அவர்கள் கடமைக்கு சென்று ஓரிரு வாரங்களுக்கும் இடைநிறுத்தப்பட்டது. இதனால் அவர்கள் பல்வேறு பொருளாதார சவால்களை எதிர்கொள்கின்றனர். இதனை கருத்திற்கொண்டு அந்த நியமனங்களை மீள வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சபையில் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளை, திருகோணமலை தொகுதியிலுள்ள சில பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதை சுட்டிக்காட்டியதுடன், அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்ட அஸ்வெசும திட்டத்தில் சில முறைகேடுகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
உரிய அதிகாரிகள் இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

