வெள்ளத்தால் பாதிக்கப்படும் மல்வானை பிரதேசத்துக்கு படகு வசதிகளை பெற்றுக்கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

112 0

கம்பஹா மாவட்டத்தில் மல்வானை பிரதேசம் அடிக்கடி வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்படும் பிரதேசமாகும். இந்த அனர்த்தங்களின்போது உடனடி நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்க அவர்களுக்கு தேவையான படகு வசதிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழை (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

கம்பஹா மாவட்டத்தில் 13 பிரதேச செயலக பிரிவுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் முகாம்களில் இருந்தால்தான் அவர்களுக்கு நிவாரண  உதவிகளை வழங்க முடியும் சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணங்களை வழங்க கிராம சேவகர்கள் பின்வாங்குகின்றனர். கம்பஹா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் என்பது எந்த காலத்திலும் ஏற்படக்கூடியது. அனர்த்தம் ஏற்படும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அரச அதிகாரிகள் கூடி ஆராய்கின்றனர். பின்னர் சுற்று நிருபத்தின் பிரகாரம் செயற்படும்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதில்லை.

ஏனெனில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்படும் அனைவரும் அன்ர்தத முகாம்களுக்கு செல்வதில்லை. எல்லா இடங்களிலும் அனர்த்த முகாம்கள் இல்லை. அதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அனைவருக்கும் நிவாரணம் வழங்கும் வகையில் குறித்த சுற்று நிருபத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அதேநேரம் சுற்று நிருபம் திருத்தப்படும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அடிப்படை உதவிகளை வழங்குவதற்கு அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் மல்வானை பிரதேசம் அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படும் பிரதேசமாகும். அந்த பிரதேச மக்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளை அங்குள்ள மதத்தலைவர்கள் ஒன்றிணைந்தே அவர்களால் முடியுமான சேவையை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த மக்கள் எப்போதும் கேட்டு வரும் விடயம்தான், தேவையான படகுகளை பெற்றுத்தர வேண்டும் என்று. மதஸ்தானங்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு இதனை பெற்றுத்தருமாறே கேட்கின்றனர்.

அதனால் அடிக்கடி பாதிக்கப்படும் இந்த பிரேசங்களுக்கு தேவையான வசதிகளை விரைவாக பெற்றுக்கொடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். வெள்ள அனர்த்த காலத்தில் இது தொடர்பாக நாங்கள் கதைக்கிறோம் வெள்ளம் முடிவடைந்ததுடன் அது தொடர்பான அனைத்து விடயங்களையும் மறந்து விடுகிறோம்.

மேலும் வெள்ள நீர் வழிந்தோடிய பல பிரதேசங்களில் மக்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி வருகின்றனர். என்றாலும் அங்குள்ள குடிநீர் கிணறுகள் அச்சுத்தமடைந்துள்ளன. அவற்றை சுத்தம் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.