ரஷ்யாவுக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும்

127 0

இலங்கையர்கள் ரஷ்யாவுக்கு  சுற்றுலா விசா ஊடாக செல்வதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் குறிப்பாக ஆண்கள் ரஷ்யாவுக்கு செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும். ரஷ்ய யுத்தக்களத்தில் பாதிக்கப்பட்டு காயமடைந்துள்ள 37 இலங்கையர்களை முதற்கட்டமாக நாட்டுக்கு அழைத்து வர இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.455 இலங்கையர்களில் 16 பேர் காணாமல் போயுள்ளனர் என வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

வெளிவிவகாரத்துறை அமைச்சின் காரியாலயத்தில் 30 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

விசிட் விசா முறைமையின் ஊடாக ரஷ்யாவுக்கு சென்ற 455 இலங்கையர்கள் துரதிஷ்டவசமாக  தற்போது நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.போலியான வாக்குறுதிகளுக்கு ஏமாற்றமடைந்து இவர்கள் ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்கள்.இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளார்.கொழும்பில் உள்ள ரஷ்ய தூதகரத்துடனும்,மோஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகத்துடனும் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரஷ்யாவுக்கு சென்றுள்ள இலங்கையர்கள் தொடர்பில் பல பொய்யான செய்திகள் வெளியாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது.ரஷ்யாவில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

அத்துடன் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியும் பொய்யானவை.உதயங்க வீரதுங்க தொடர்பில் எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

விசிட் விசாவில் ரஷ்யாவுக்கு சென்றவர்கள் தாம் யுத்தக்களத்தில் பணிக்கமர்த்தப்படுவதை அறியவில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.இரண்டாம் தர சேவைகளுக்காக சென்றதாகவும் குறிப்பிடுகிறார்கள்.போலியான வாக்குறுதிகளினால் இவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.மனித கடத்தல் வியாபாரத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.குற்றப்புலனாய்வு திணைக்களத்தி;ன் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ரஷ்ய யுத்த களத்துக்கு சென்றவர்களில் 16 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளனர்.37 பேர் காயங்களுக்குள்ளாக்கப்பட்டு சிகிச்சைப் பெறுகிறார்கள்.உயிரிழந்தவர்கள் தொடர்பான முழுமையாக தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

இலங்கையர்கள் ரஷ்யாவில் நெருக்கடிக்குள்ளாகியுள்ள விவகாரத்துக்கு உடன் தீர்வு காண்பதற்கு கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் இணக்கம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சுடன் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிகழ்நிலைமை ஊடாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்.

அத்துடன் இலங்கையர்கள் ரஷ்யாவுக்கு முறையான காரணிகள் இல்லாமல் செல்வதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங்கையர்கள் குறிப்பாக ஆண்கள் ரஷ்யாவுக்கு செல்வதாக இருந்தால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தில் ஈடுபடுவதற்காக தாம் ரஷ்யாவுக்கு செல்லவில்லை என்று அங்கு நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் குறிப்பிடுகிறார்கள்.ஆகவே இவர்களை யுத்தக்களத்துக்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சிடம் வலியுறுத்தவுள்ளோம்.

இலங்கையின் விசேட குழுவினர் எதிர்வரும் ஐந்தாம் திகதி ரஷ்யாவுக்கு செல்லவுள்ளனர். காயமடைந்துள்ள 37 இலங்கையளர்களை முதற்கட்டமாக நாட்டுக்கு அழைத்து வர பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பலவந்தமான முறையில் யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் மற்றும் இலங்கைக்கு மீண்டும் வருகை தர விரும்பும் தரப்பினரை நாட்டுக்கு அழைத்து வர ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம் என்றார்.