பாராளுமன்ற தேர்தலையொட்டி கடந்த மாதம் 26-ந்தேதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படும் இந்த பணம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பா.ஜ.க. நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் நவீன் அவரது சகோதரர் சதீஷ், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், முருகனிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோரிடம் சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளனர். நாளை மறுநாள் விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது.

