இலங்கையில் பின்னடைவான நிலையில் சிறுபான்மையினரின் மத சுதந்திரம்

35 0

இலங்கையில் மத சுதந்திரம் என்பது கரிசனைக்குரிய மட்டத்திலேயே காணப்படுவதாகவும், மத சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் என்பன மத ரீதியிலான நெருக்கடிகளைத் தீவிரப்படுத்தியிருப்பதாகவும் சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச மதசுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவினால் இலங்கையில் மதசுதந்திரம் மீதான சவால்கள் தொடர்பில் அண்மையில் நிகழ்நிலை முறைமையிலான கருத்துக்கோரல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சர்வதேச மதசுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் பிரதி தவிசாளர் பிரெடெரிக் ஏ.டேவி, ஆணையாளர்களான டேவிட் ஹரி மற்றும் ஸ்டீபன் ஸ்னெக் ஆகிய மூவரடங்கிய குழாம் இதற்குத் தலைமைதாங்கியது.

அதன்படி இலங்கையின் மதசுதந்திர நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்குழாமில் உள்ளடங்கும் பிரதிநிதிகள், ‘போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் இலங்கை அதன் இன, மத வன்முறை வரலாற்றுடனான சமரசத்தைத் தொடர்கின்றது. இலங்கையில் மத சுதந்திரம் தொடர்பான நிலைவரம் கரிசனைக்குரிய மட்டத்திலேயே காணப்படுகின்றது.

குறிப்பாக தமிழ் கத்தோலிக்கர்கள், தமிழ் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் என்பன மத ரீதியிலான அமைதியின்மையைத் தீவிரப்படுத்தியுள்ளன. பயங்கரவாத்தடைச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டம் மற்றும் நிகழ்நிலைக்காப்பு சட்டம் என்பன உள்ளடங்கலாக மத சிறுபான்மையினரை இலக்குவைக்கக்கூடியவாறான பல்வேறு கொள்கைகள் இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அண்மையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள கோயில்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட மதவழிபாட்டுத்தலங்களை அபகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தீவிர அமைதியின்மையைத் தோற்றுவித்துள்ளன’ எனச் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு தமது ஆணைக்குழுவின் அதிகாரிகள் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அரசாங்கத்தின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், மத சுதந்திர செயற்பாட்டாளர்கள், இன-மத சமூகக்குழுக்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடியதாகவும், அவற்றை அடிப்படையாகக்கொண்டு மத சுதந்திரத்தைப் பொறுத்தமட்டில் இலங்கையை விசேட கண்காணிப்புக்கு உட்படுத்தவேண்டிய பட்டியலில் வைக்கவேண்டுமெனப் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்துக்குப் பரிந்துரைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து இக்கருத்துக்கோரலில் மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பின் (பேர்ள்) நிறைவேற்றுப்பணிப்பாளர் மதுரா ராசரத்னம், இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேச (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் மத சுதந்திர ஆணைக்குழுவின் தலைவர் மைக் கேப்ரியல், பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் இணை ஸ்தாபகர் ஷ்ரீன் ஸரூர் மற்றும் சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் அலன் கீனன் ஆகியோர் பங்கேற்று சாட்சியம் அளித்தனர். இலங்கையின் மத சுதந்திர நிலைவரம் தொடர்பில் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:

 ஹிஜாஸ் ஹிஸ்புல்லா

இலங்கையின் மனித உரிமைகள் சட்டத்தரணியும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்தவருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, முல்லைத்தீவு, குருந்தூர்மலை விவகாரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல எனவும், மாறாக தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலான பிரச்சினை எனவும் சுட்டிக்காட்டினார். அதேவேளை கடந்த 2016 ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக கடந்த மார்ச் 28 ஆம் திகதி கொழும்பு நீதிமன்றத்தினால் கலகொட அத்தே ஞானசாரருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை நினைவுகூர்ந்த அவர், சிறுபான்மை மதத்தை அவமதித்தமைக்காக பௌத்த தேரர் ஒருவருக்கு இத்தகைய தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறை எனத் தெரிவித்தார். இருப்பினும் ஞானசார தேரரினால் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவந்த நடவடிக்கைகளையும், அவற்றுக்கு ஊடகங்கள் வழங்கிய முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டிய ஹிஜாஸ், இருப்பினும் ஞானசாரர் நீண்டகாலமாக கைதுசெய்யப்படவில்லை எனவும் விசனம் வெளியிட்டார்.

முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதமாக பயங்கரவாதத்தடைச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டம் என்பன பயன்படுத்தப்பட்டமை குறித்தும், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்களின் மத சுதந்திரம் வெகுவாக ஒடுக்கப்பட்டமை குறித்தும் விரிவாக விளக்கமளித்த அவர், தற்போது நடைமுறைக்கு வந்திருக்கும் நிகழ்நிலைக்காப்பு சட்டமூலமும் மத சுதந்திரத்தை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தக்கூடும் என சந்தேகம் வெளியிட்டார்.

மதுரா ராசரத்னம்

‘இலங்கை அரசியலமைப்பின் ஊடாக சகல மதங்களுக்குமான சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பினும், அதில் பௌத்த மதத்துக்கே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே முதலிடம் அளிக்கப்பட்டுள்ள பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காக அரச கட்டமைப்புக்கள் தமிழ் இந்துக்கள், தமிழ் கிறிஸ்தவர்கள், சிங்கள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் மத, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மிகத்தீவிரமாக ஒடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தன. இந்நடவடிக்கைகளே மூன்று தசாப்தகால யுத்தத்துக்குத் தூண்டுதலாக அமைந்தன. யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழர்கள் வாழும் வட, கிழக்கு மாகாணங்களை அரச அனுசரணையுடன் சிங்கள, பௌத்தமயமாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன’ என இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மதுரா ராசரத்னம் சுட்டிக்காட்டினார்.

 மைக் கேப்ரியல்

இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேச (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் மத சுதந்திர ஆணைக்குழுவின் தலைவர் மைக் கேப்ரியல் இலங்கையில் கிறிஸ்தவ சமூகம் முகங்கொடுத்துவரும் மதரீதியான ஒடுக்குமுறைகள் தொடர்பில் விளக்கமளித்தார். ‘2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் கிறிஸ்தவ சமூகத்துக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் வன்முறை சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. இருப்பினும் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படாததைப்போன்று மேற்படி ஒடுக்குமுறைகளுடன் தொடர்புடையோரும் எவ்வித நடவடிக்கையுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். கத்தோலிக்க தேவாலயங்கள் பதிவுசெய்யப்படவேண்டும் எனவும், அன்றேல் வழிபாட்டு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படவேண்டும் எனவும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன’ என அவர் தெரிவித்தார்.

அலன் கீனன்

‘அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளான வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் மீதான அழுத்தங்கள் அண்மையகாலங்களில் வெகுவாக அதிகரித்துவருகின்றன’ எனக் குறிப்பிட்ட சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் அலன் கீனன், வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயம் மற்றும் முல்லைத்தீவு குருந்தூர்மலை விவகாரம் ஆகிய இரண்டையும் அண்மையகால உதாரணங்களாக சுட்டிக்காட்டினார்.