வீதி விபத்துக்களில் 5 பேர் பலி!

13 0

பல பிரதேசங்களில் இடம்பெற்ற 5 வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துகள் நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு பரந்தன் வீதியில் மூங்கிலாறு பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

இதில் பயணித்த 6 பேர் படுகாயமடைந்து மூங்கிலாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் தம்பிராசபுரம், தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

உழவு இயந்திரத்தில் பயணித்த 14 பேர் முல்லயாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றிற்காக பயணித்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நீர்கொழும்பு – திவுலப்பிட்டி வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று லொறியுடன் மோதியதில், பலந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பிலிபிட்டிய – நோனாகம மேரி ஹல்மில்லகெட்டிய பிரதேசத்தில் லொறி ஒன்று எதிர்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த இருவர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர்.

தெலில்பலே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி – மைலோட் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குளியாபிட்டிய – நாரம்மல வீதியின் தும்மோதர பிரதேசத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.