சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

159 0

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் அரண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த பல சமர்க்களங்களில் வீரகாவியம் படைத்து தங்களை தமிழீழ விடுதலைக்காக விதையாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 19.05.2024 ஞாயிறு பேர்ண் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மாவீரர் பொதுக் குறியீட்டுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. ஈகைச்சுடர்களை மாவீரர்களின் குடும்ப உறவுகளும், உணர்வாளர்களும் பெரும் தளபதிகளுக்கு ஏற்றிவைத்தனர். மண்டியிடா மாவீரர்களுக்கு அகவணக்கத்துடன் சுடர்வணக்கம், மலர்வணக்கம் மக்களால் செலுத்தப்பட்ட வேளையில் இசைக்கலைஞர்களால் மாவீர வணக்கப் பாடல்களுடன், எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன.

நடுகல் நாயகர்களாக தங்களை விதையாக்கிய பெருந்தளபதிகளையும், மாவீரப் போராளிகளையும் நினைவுகூரும் இவ் வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக இளையோர்களின் எழுச்சி வணக்கப் பாடல்கள், எழுச்சி நடனங்களுடன், மாவீரர் நினைவுரையும் சிறப்புரையும் இடம்பெற்றது.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்… என்ற பாடலை மக்கள் எல்லோரும் இளையோர், சிறுவர்களுடன் இணைந்து நம்பிக்கையுடன் பாடினர். தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலினைத் தொடர்ந்து, தாரக மந்திரத்துடன் உறுதியெடுத்து நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு