நெதர்லாந்தில் மே18 தமிழ் இன அழிப்பு நாள் 18.05.2024 சனி Damplein, Amsterdam நகரில் நினைவு கூரப்பட்டது.

503 0

நெதர்லாந்தில் மே18 தமிழ் இன அழிப்பு நாள் 18.05.2024 சனி Damplein, Amsterdam நகரில் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது. மதியம் 13.00மணியளவில் ஆரம்பமாகிய இந் நிகழ்வு பொதுச்சுடரேற்றப்பட்டு பின் நெதர்லாந்து, தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றலைத் தொடர்ந்து நெதர்லாந்தில் வாழ்கின்ற உறவுகள் முள்ளிவாய்க்கால் மண்ணிலே அநியாயமாக் கொல்லப்பட்ட தம் உறவுகளிற்கு கலங்கிய மனங்களுடன் ஈகைச்சுடரேற்ற, தொடர்ந்து அகவணக்கமும் இடம்பெற்றது.

பின்னர் பொது மக்கள் அனைவரும் கனத்த இதயத்துடன் தாயக மண்ணிலே கொத்துக் கொத்தாய் அநியாயமாக கொன்றொழிக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளுக்கு மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வும் வெகு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. தொடர்ந்து தமிழினத்திற்கு நேர்ந்த இன அழிப்பினை அனைவருக்கும் உணர்த்துமுகமாக நெதர்லாந்து மொழியிலும் ஆங்கில மொழியிலும் நினைவுரைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து நினைவுக்கவிதைகள் நினைவுநடனமும் இடம்பெற்றது. பின்னர் தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பினை வெளிப்படுத்துமுடமாக நாடகம் ஒன்றும் தமிழிலும் நெதர்லாந்து மொழியிலும் காட்சிப்படுத்துமுகமாக நடைபெற்றது. அத்துடன் தாயகத்தில் இடம்பெற்ற கொடூரக் கொலைகளிற்கு சாட்சியாக புகைப்படங்களும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பின்னர் முள்ளிவாய்க்கால் மண்ணில் எம்மினம் பட்ட பட்டினித்துயரில் பங்கேற்குமுகமாக அனைவரிற்கும் உப்பில்லா கஞ்சியும் வழங்கப்பட்டது.

மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்ற இந்நிகழ்வு 16:00மணியளவில் தேசியக் கொடிகள் கையேற்கப்பட்டு இறுதியாக எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற கோசத்துடன் அமைதியாக நிறைவெய்தியது.