தமிழின அழிப்பிற்கு தமிழீழம் ஒன்றே தீர்வு-தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி.

82 0

 

16.05.2024

தமிழின அழிப்பிற்கு தமிழீழம் ஒன்றே தீர்வு

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ உறவுகளுக்கு தமிழ் இளையோர் அமைப்பு தனது எழுச்சிகரமான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் வல்லாதிக்க நாடுகளுடைய துணையுடனும் சூழ்ச்சியாலும் சிங்கள பயங்கரவாத அரசினால் எம் தமிழீழ மக்கள் இனவழிப்புக்கு உட்பட்டு 15ஆம் ஆண்டு வலி சுமந்த நாளை தமிழினம் தாங்கி நிற்கின்றது.

எமது தமிழினத்தின் பாதுகாவலர்களாக திகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடைய ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு தமிழினத்தின் பாதுகாப்பு உறுதியற்ற நிலையில் தாயகத்தில் வாழும் எமது உறவுகள் துயரத்தையும் அழிவுகளையும் சுமந்து சொல்ல இயலாத துன்பத்தை அனுபவித்து வருகின்ற நிலையில் மிகவும் திமிருடன் திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பை சிங்கள பயங்கரவாத அரசு தொடர்ந்தும் நிகழ்த்துகின்றது. தமிழர்களுடைய வாழ்நிலங்களையும் வழிப்பாட்டுத் தளங்களையும் சிங்கள மயமாக்குவதுடன் தமிழீழ இளைய தலைமுறையுடைய கல்வியையும் வாழ்வையும் சீரழித்து அறிவாற்றல் அற்ற ஓர் தமிழீழ குமகாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

தமிழினத்தின் மாபெரும் தலைவராகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேராக திகழ்கின்ற எமது ஒப்பற்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை தமிழ் மக்களின் மனதில் இருந்து அகற்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு சாவுமணி அடிக்க எதிரிகளும் துரோகிகளும் தமிழர்கள் மீதி அறிவிக்கப்படாத உளவியல் போரை முன்னெடுத்துள்ளார்கள்.

தமிழீழ மண்ணில் இறந்த எம் உறவுகளுக்கு வணக்கம் செலுத்தக் கூட சிங்கள பயங்கரவாத அரசு அச்சுறுத்துகின்றது. இது அடிப்படை மனிதவுருமை மீறல் மேலும் இவ்வாறான அரசுடன் தமிழீழத் தமிழர்களாகிய நாம் என்றும் இணைந்து பாதுகாப்பாக வாழ்வது சாத்தியமற்ற விடயம் என்பதை சர்வதேச நாடுகளுக்கு இவ்வறிக்கை கூடாகச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அன்பார்ந்த தமிழுறவுகளே காலத்தின் தேவை உணர்ந்து ஒற்றுமையாக ஓரணியல் நாம் இணைந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் காட்டிய வழியில் எம்முன் நிற்கின்ற அனைத்து சவால்களையும் நாம் வென்றிடலாம்.

தமிழீழ மண்ணை உயிரினும் மேலாக நேசித்து களமாடி வீரமரணமடைந்த மாவீரர்களதும், இனவழிப்பிற்கு பலியான எம் தமிழுறவுகளை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்துவதோடு, அவர்கள் எந்தத் தமிழீழ தனியரசு என்ற இலட்சியத்திற்காகத் தமது உயிரை ஈந்தார்களோ, அந்த இலட்சியம் நிறைவேறும் வரை அனைத்து தமிழுறவுகளும் தொடர்ந்தும் உறுதியோடும் நெஞ்சுரத்தோடும் போராடுவோமென இந்நாளில் உறுதியெடுத்து போராட வேண்டியது காலத்தின் கட்டாயமாக திகழ்கின்றது.

நன்றி.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி