மின்சார சபையை மறுசீரமைக்கும் பணிகள் தொடரும்

20 0

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாட்டை இடைநிறுத்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைய செயற்படுவீர்களா ?அல்லது மறுசீரமைப்புக்களை தொடர்வீர்களா என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல  மின்சாரத்துறை அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.

மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது.ஆகவே மின்சார சபையை மறுசீரமைக்கும் பணிகள் தொடரும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில்  திங்கட்கிழமை (13) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல,

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல்,மறுசீரமைத்தல்  என்பதற்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை முழுமையாக இடைநிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அத்துடன் இந்த நடவடிக்கைகளை அடுத்த அரசாங்கத்துக்கு பொறுப்பாக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள்  தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.ஆகவே மின்சாரத்துறை அமைச்சர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவாரா ?அல்லது மறுசீரமைப்புக்களை முன்னெடுத்துச் செல்வாரா என கேள்வியெழுப்பினார்.

இதற்கு எழுந்து பதிலளித்த மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பு தொடர்பில் குறிப்பிடவில்லை.மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது.ஆகவே மறுசீரமைப்புக்கள் தொடரும் என்றார்.

மீண்டும் எழுந்து உரையாற்றிய லக்ஷ்மன் கிரியெல்ல, அனைத்து கேள்விகளுக்கும் கேலிக்கையாக பதிலளிக்க வேண்டாம்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டாம்,தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை இடைநிறுத்துங்கள்,புதிய மக்களாணையுடன் பணிகளை முன்னெடுக்கலாம்’ என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.நான் அறிக்கையை முழுமையாக வாசித்தேன்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒன்றை குறிப்பிடுகிறார், தற்போதைய  ஜனாதிபதி பிறிதொன்றை குறிப்பிடுகிறார்.நீங்கள் எந்த பக்கம், (மின்சாரத்துறை அமைச்சரை நோக்கி) இவர் இடைநடுவில் இருப்பதை அறிவோம்.மறுசீரமைப்புக்களை மக்களாணை பெறும் புதிய அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ தெளிவாக குறிப்பிட்டுள்ளார் என்றார்.