மின்னல் தாக்கத்தினால் அவசர சிகிச்சைப் பிரிவு முற்றாக நாசம்

24 0

வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு (ETU) கடும் மழையுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் முற்றாக சேதமடைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற மின்னல் தாக்கத்தினால் வைத்தியசாலையில் இருந்த அனைத்து மின் உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதுடன், மின்னல் தாக்கத்தினால் கட்டிடமும் சேதமடைந்துள்ளது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (11) வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலைக்கு ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்.

மின்னல் தாக்கத்தால் ETU க்கு ஏற்பட்ட சேதங்கள் சுமார் ரூ. 50 மில்லியன் ஆகுமென அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று (11) தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய அமைச்சர், இந்த அவசர சிகிச்சைப் பிரிவை புனரமைப்பதற்கு பணம் ஒதுக்கப்படும் எனவும், ஆளுநர் இன்று வைத்தியசாலையை பார்வையிடுவார் எனவும் தெரிவித்தார்.

மின்னல் தாக்கத்தின் போது பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூன்று நோயாளர்கள் காயமடையவில்லை. எவ்வாறாயினும், மின்னல் தாக்கத்தின் பின்னர் தீ பரவியமையினால் நோயாளிகளை வெளியேற்ற பெரும் முயற்சிகளில் ஈடுபட வேண்டியிருந்ததாக வைத்தியசாலை ஊழியர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.