வெளிப்படைத்தன்மையின் அவசியம் குறித்து மத்திய வங்கி ஆளுநரிடம் அமெரிக்கத்தூதுவர் வலியுறுத்தல்

109 0

இலங்கையில் சிறந்த ஆட்சி நிர்வாகத்தையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதிசெய்யவேண்டியதன் அவசியம் குறித்து அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 80 ஆம் பிரிவின்படி 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கை மற்றும் 99 ஆம் பிரிவின்படி கடந்த ஆண்டுக்கான மத்திய வங்கியின் நிதியியல் கூற்றுக்கள் என்பன அண்மையில் வெளியிடப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் சில தினங்களுக்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின்போது இருதரப்புத் தொடர்புகள், கடன்மறுசீரமைப்பு மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்புக்கள் என்பன பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், அதில் இலங்கையில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு வழங்கிவரும் நிலையில், சிறந்த ஆட்சி நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அவசியம் குறித்து தான் மத்திய வங்கி ஆளுநரிடம் வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.