டயனா கமகேவுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாராளுமன்றத்துக்கும் விடுதலையாகும்

124 0

உயர் நீதிமன்றம் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்கி வழங்கிய தீர்ப்பு பாராளுமன்றத்துக்கும் பாரியதொரு விடுதலையாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற இராஜதந்திர சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்குத் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இராஜாங்க அமைச்சராக இருந்த டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பாக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பொன்றை வழங்கி இருக்கிறது. நாட்டில் பெரும்பாலானவர்களின் பேசுபொருளாக இருந்துவந்த தீர்ப்பாகும்.

ஏனெனில் டயனா கமகேவின் பிரஜை உரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இதற்கு முன்னர் வழங்கிய தீர்ப்பு, தற்போது உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முற்றிலும் மாற்றமான தீர்ப்பாகும்.

அதனால் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொடர்பில் நாங்கள் உயர் நீதிமன்றத்துக்கு எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஏனெனில் இலங்கை பிரஜை அல்லாத ஒருவர் சுமார் நான்கு வருடங்கள் இந்த சபையில் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறது. அதனைச் சரி செய்யும் வகையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.

அத்துடன் டயனா கமகே பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு இந்த சபையில் செயற்பட்ட விதம் தொடர்பில் பலரது எதிர்ப்புக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகி இருக்கிறது. அதனால் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பாராளுமன்றத்துக்கும் பாரியதொரு விடுதலையாகும் என்றார்.