கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட நீண்ட மற்றும் குறுகிய சத்திர சிகிச்சைகளை அடிப்படையாகக் கொண்ட மருத்துவப் பயிற்சிக்கான பதிவு தேர்வினை (ஈ.ஆர்.பி.எம்) இரத்துச் செய்வதற்கான தீர்மானத்தை இலங்கை மருத்துவ சபை எடுத்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எதிர்ப்பினை தெரிவித்து முறைப்பாடளித்துள்ளனர்.
2004 மே மாதம் முதலாம் திகதி இலங்கை மருத்துவ சபையின் பதிவாளருக்குப் பாதிக்கப்பட்ட மாணவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், ஏற்கனவே நிறைவடைந்த பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளமையானது அநீதியான செயலாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், இலங்கை மருத்துவ சபை உறுப்பினர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களுக்கு அவ்வாறான கடிதம் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்றும், இந்த பிரச்சினை குறித்துக் கலந்துரையாடுவதற்கு அவசர கூட்டத்தை நடத்துவதற்கு இலங்கை மருத்துவ சபையின் தலைவரிடம் கோரப்பட்டுள்ளதாக மருத்துவ சபை உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட நீண்ட மற்றும் குறுகிய சத்திர சிகிச்சைகளை அடிப்படையாகக் கொண்ட மருத்துவப் பயிற்சிக்கான பதிவு தேர்வில் தோற்றிய மாணவர் ஒருவரால் மொழிபெயர்ப்பு தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இலங்கை மருத்துவ சபை விசாரணையைத் தொடங்கிக் குறித்த மாணவரின் முறைப்பாடு நியாயமானது என ஏற்றுக்கொண்டுள்ளதுடன், குறித்த பரீட்சைக்குத் தோற்றிய 41 மாணவர்களுக்கும் மீண்டும் பரீட்சையை நடத்துமாறு இலங்கை மருத்துவ சபை பரிந்துரைத்துள்ளது.
ஆனால் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இலங்கை மருத்துவ சபையின் இந்த தீர்மானம் பாரபட்சமானது எனக் குறிப்பிட்டு கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டனர். அதே போன்று சுயாதீன விசாரணைக்கும் வலியுறுத்தப்பட்டது.
எனினும் குறித்த பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு இலங்கை மருத்துவ சபையின் தலைவரால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் மாற்றம் ஏற்படாமையினால் பாதிக்கப்பட்ட மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தொடர்ந்து எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

