விடுதலை கானம்பாடி 2024-யேர்மனி ,எசன்

298 0

கடந்த 05.05.2024 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் விடுதலை கானம்பாடி பாடற்போட்டி நிகழ்வு எசன் நகரத்தில் நடைபெற்றது. இப்போட்டி நிகழ்வில் பல நகரங்களிலிருந்து இளம்போட்டியாளர்கள் பங்குகொண்டிருந்தனர். வழமையாக நான்கு பிரிவுகளாக நடாத்தப்படும் போட்டியானது இன்னும் பல புதிய போட்டியாளர்களை ஊக்குவித்து உள்வாங்கும் நோக்கில் விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி அதிகீழ்ப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் நடாத்தப்பட்டது. இப்போட்டியின் நடுவர்களாக சுவிஸ் நாட்டிலுருந்து இசைக்கலைமணி தயானந்தன் அஜானா, இசைக்கலைமணி சிவானந்தராஜா மிர்துளா, இசைக்கலைமணி சிவானந்தராஜா ரம்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் ஆரம்பநிகழ்வாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் யேர்மன் கிளையின் துணைப்பொறுப்பாளர் திரு சுப்பிரமணியம் ஜெயசங்கர் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கி போன எம் தாயக உறவுகளின் நினைவாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தாயகநலன் பொறுப்பாளர் திரு. இரா. இராஜன் அவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்திய திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. பின்னர் நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து மங்கல விளக்கினை தழிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் யேர்மன் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் , தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மத்தியமாநிலம் 1இன் பொறுப்பாளர் திரு. சின்னையா நாகேஸ்வரன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் வடமத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு. முத்துவேலு இராசா , தமிழர் விளையாட்டுக்கூட்டமைப்பின் யேர்மன் கிளைப் மொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் இராஜகுமாரன் , தமிழர் கலைபண்பாட்டுக்கழக மிருதங்க, தபேலா வித்துவான் திரு. சண்முகலிங்கம் தேவகுருபரன் , தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்லண்ட் மாநிலப் பொறுப்பாளர் திரு. பரநிருபசிங்கம் கனகசபை , தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. திருநிலவன் ஆகியோருடன் போட்டியின் நடுவர்களான இசைக்கலைமணி தயானந்தன் அஜானா, இசைக்கலைமணி சிவானந்தராஜா மிர்துளா, இசைக்கலைமணி சிவானந்தராஜா ரம்யா ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றிவைத்து சிறப்பித்தனர்.

தொடர்ந்து போர்களங்களில் வீரகாவியமான மாவீரர்களுக்காகவும் மக்கள், நாட்டுப்பற்றாளர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளின் இடையிடையே மக்களைக் கவரும் வகையில் நடனங்களும், வாழ்த்துரை சிறப்புரை போன்றவையும் இடம்பெற்று நிறைவாக நடுவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். தொடர்ந்து போட்டியில் பங்கேற்றவர்களுக்கான பங்கேற்பு மதிப்பளிப்பும் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்ட வெற்றியாளர்களுக்கான வெற்றிக்கேடயமும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் விடுதலை கானம்பாடி பாடற்போட்டி 2024 இற்கான நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.